தைமகளை வரவேற்போம் !
மார்கழி மறைந்திட்டு பனித்திரை விலகிட்டு
கார்மேகம் கரைந்திட்டு நீர்நிலைகள் உயர்ந்திட்டு
வான்திரை ஒளிர்ந்திட்டு நித்திரை கலைந்திட்டு
பார்எங்கும் மகிழ்ந்திட தைமகளே வருக வருக !
பொய்த்திட்ட மழையால் காய்ந்திட்ட பயிர்களை
பொன்விளை பூமியை களையிழந்த கன்னியாய்
வழிந்திடும் ஏரிகளை பாலைவன மணற்பரப்பாய்
கண்டிடும் கண்களை கண்ணீரும் மறைக்கிறது !
உழவன் வீட்டிலே அடுப்பு எரிந்தால்தான்
உலகில் உள்ளோரின் வயிறும் நிறையும் !
உழுதவன் வாழ்ந்தால் ஊரே வாழ்ந்திடும் !
உழவனே அழுதால் ஊர் என்ன பாடுபடும் ?
விரக்தியின் விளிம்பில் விவசாயி எடுத்திடும்
தற்கொலை முடிவால் தவிக்கிறது குடும்பம் !
வேடிக்கை பார்த்திடும் விந்தைமிகு இயற்கை
இரவல் கண்ணீர்கூட சிந்திட மறுக்கிறது !
அரசியல் வாதியோ தன்னையே நினைக்கிறான்
அரசு எந்திரமோ அசைவின்றி உறங்குகிறது
அரிசி விலையோ இமயத்தைத் தொடுகிறது
அடிமட்ட உயிர்களோ பசியால் துடிக்கிறது !
வறுமைக் கோடே பொறுமை இழந்தது
வரைந்த இடம்விட்டு வானத்தில் பறக்கிறது !
வாழ்ந்திட வழியறியா வறியோர் அல்லாது
வாழ்வே எவருக்கும் கேள்விக் குறியானது !
இக்கட்டான இந்நிலையில் வக்கற்ற எங்களுக்கு
பகட்டில்லா பருவத்தில் வந்திடும் தைமகளே
தமிழர்க்கு புதுவாழ்வு புத்தாண்டில் பெற்றிட
விடியலாய் இருந்திட விரைந்தே வருக !
தைப் பிறந்தால் வழிப் பிறக்கும் !
முன்னோர் சொன்னது நடந்திட
நன்னாளை எதிர்நோக்கும் நலவிரும்பி !
பழனிகுமார்