ஒற்றை வரம் சிலருக்கு நடைபாதையில் பூக்களை தூவினீர்கள்.. எனக்கு...
ஒற்றை வரம்
சிலருக்கு நடைபாதையில் பூக்களை தூவினீர்கள்..
எனக்கு முட்களை அல்லவா பரப்பினீர்கள்...
சிலருக்கு சலங்கைகள் பூட்டி அழகு பார்த்தீர்கள்..
எமக்கோ விலங்குகளை அல்லவா பூட்டினீர்கள்...
இறக்கைகள் கொண்டு விண்ணில் பறந்தேன்...
சிறகுகளை பொசுக்கினீர்கள்...
மண்ணில் விழுந்து மானாய் ஓடினேன்... கால்களை வெட்டினீர்கள்...
தரையில் கிடந்து சர்ப்பமாய் ஊர்ந்தேன்...
அடித்து கொன்று மண்ணில் புதைத்தீர்கள்...
விதையாய் உருவெடுத்து மண்ணை கிழித்து எட்டிப் பார்த்தேன்...
காலால் நசுக்கி அமிழ்த்தினீர்கள்...
கார்காலம் ஆதலால் காட்டாற்றில் கலந்து நதியாய் நகர்ந்தேன்...
கடலில் ஆழ்த்தினீர்கள்...
மூழ்கியது நானல்ல ...
முடிந்தது ஆட்டம் என வெற்றி களிப்பில் மூழ்கியவர்கள் நீங்கள்...
கண்ணீர் கலந்து கடல் நீர் மட்டம் உயர்ந்தது...
கத்தி கதறி கடல் நீரில் தவமியற்றினேன்...
அலறல் ஒலி வான் பிளக்க,
வானைப் பிளந்து வந்த சுழல்காற்று எனை மேக கூட்டம் சேர்த்தது...
மேகத்தில் மெதுவாய் மிதந்து பரம்பொருளின் பாதம் பற்றினேன்...
பரம்பொருள் எம்மை வரம் கேட்க கோரினார்...
நான் சற்றே சிந்தித்து ஒற்றை வரம் கேட்டேன்...
எம்மை பக்குவப் படுத்திய உயிர்களுக்கு, என் நன்றிக்கடனை செலுத்த வேண்டுமென்றேன்...
இறைவனின் வரம் பெற்று, மழையாய் மாறி மண்ணில் பொழிகிறேன்...
வருகின்ற வழியில் என் போன்ற பாவப்பட்ட பறவைகளின், பொசுக்கப் பட்ட சிறகுகளின் நெருப்பை அணைப்பேன்...
காலொடிந்த மான்களின் காயங்களை ஆற்ற, மூலிகை செடிகளை முளைக்கச் செய்வேன்...
புதைக்கப்பட்ட சர்ப்பங்களின்,
மூச்சுக்காற்றில் அமிர்தமாய் பொழிவேன்...
மண்ணைக் கிழித்து முட்டி மோதி வரும் செடிகளைக் கரம் கொடுத்து தூக்கி விடுவேன்....
சுழல்காற்றின் துணை கேட்டு, நதிகளை நல்வழியில் சேர்ப்பேன்...
இறுதியில் எமை தடுக்க நினைத்த மனங்களின் வேட்கையை தணிக்க குளிர்மழையாய் பொழிவேன்...
அத்தனைப் பணியும் முடித்து இறுதியில் கடலில் விழுந்து, மேகத்தில் மிதந்து, எம் பரம்பொருளின் பாதத்தில் சரணாகதி அடைவேன்...