திருடனுக்கு வந்த சோதனை

=============================
வீட்டுக் கதவில் பூட்டைப் போட்டவர்கள் சாவிக்கொத்தை ஞாபக மறதியாக அருகில் இருக்கும் திண்ணையில் வைத்துவிட்டுப் போயிருந்தார்கள். அவ்வழியே தொழிலுக்காக போய்க்கொண்டிருந்த திருடன் ஒருவன் கண்ணில் இந்தக் காட்சி பதிவாகியது. அக்கம்பக்கம் பார்த்தான். ஆளரவம் இல்லை. காவல் நாயும் கூட இல்லை. சந்தர்ப்பம் அவனை வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்தது. நேரத்தை வீணடிக்காமல் கதவருகே சென்றான். சாவிக்கொத்தை எடுத்தான். ஒவ்வொரு சாவியாக போட்டு பூட்டைத் திறக்க முயற்சித்தான். ம்ஹூம்... ஒன்றும் சரிவரவில்லை. தனது மூளையைக் கசக்கி மறுபடியும் முயற்சித்தான் . பூட்டை அவனால் திறக்க முடியவில்லை.
திடீரென்று ஒரு ஐடியா.. தன்னிடம் இருந்த கள்ளச் சாவிகளைப் பாவித்தான். அதற்கும் மசியவில்லை அந்தப் பூட்டு. நேரம் போய்க்கொண்டிருந்தது. வீட்டுக்காரர்கள் வந்து விடுவார்களோ என்று பயந்தான். இருந்தும் தன் முயற்சியை தளரவிடாமல் தொடர்ந்தான். அப்போது ஒரு வாகனம் வரும் சத்தம். திரும்பிப்பார்த்தான். வாகனம் வீட்டை நோக்கியே வந்துகொண்டிருந்தது. மேலும் அங்கிருந்தால் ஆபத்து .உணர்ந்தவன் ஓடி மறைந்தான். அதற்குள் வீட்டை வந்தடைந்த வாகனத்திலிருந்து இறங்கிய வீட்டுக்காரன் தொலைந்துபோன அந்தப் பூட்டிற்கு வெட்டிவந்த புதிய சாவியை இட்டுத் திறந்து உள்ளே நுழைந்தான். மறைவில் இருந்து இதை அவதானித்த திருடன் ஏமாற்றத்துடன் நடையைக்கட்டினான்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (20-Jun-17, 4:13 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 561

மேலே