சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல் ...!

உயிரும் மெய்யும் புணர்ந்து
பிறந்தவை செந்தமிழின் பதங்களாம் ;
தனித்தும் கூடியும் பொருளொன்று
தர உலா வருமாம் ;
உயர்திணை அஃறிணை வேறுபடுத்தி
சொற்கள்பேசும் தெளிந்த நீரோடையாம் ;
பெயரிடை வினையுரி யென
நால்வகையாய் நடப்பட்ட நாற்றுகளாம் ;
ஒருசொல் பலபொருள் பலசொல்
ஒருபொருள் சொற்களின் சமுத்திரமாம் ;
எண்ணங்கள் பக்குவப்படுத்தப்பட்ட பதங்களினால்
எழில்மிகு சுடராக வழிநல்குமாம் ;
எழுத்தாளனுக்கு எவ்வளவு வேண்டினும்
வார்த்தை இரவல் அளிக்குமாம் ;
கடனாளியவன் காப்பியத்தாலும் கவிதையாலும்
கன்னித்தமிழுக்கு விருந்தொன்று படைப்பானாம் ;
அமலர்க ளவர்களின் அணிகலனால்
அழகுமெரு கேறியஎந் தமிழ்த்தாயவள்
அன்னநடையிட்டு அகிலத்தில் உலாவருவது
இரத ஊர்வலம் தான் ;
பிறந்துவாழும் பிறமொழிகளுக்கு மத்தியில்
சிறந்து வாழும்என் தமிழ்ச்சொல்லே
தன்னிகரற்றதோர் உயர்வாம் தரணியில் ....!

எழுதியவர் : த.மலைமன்னன் (22-Jan-13, 2:56 pm)
பார்வை : 290

மேலே