புள்ளி"ராஜா"...!

முழுதாய் ஐந்து கைகள்
கொண்ட - ஜந்துக்கள்
எங்களிடையே சந்துகள்
ஏராளம் - புகுந்து சபைகள்
ஏறலாம் - சதைகள்
வேர்க்காத வண்ணம் !

எப்போது யாரால்
பிறக்கிறோம் - எனத்
தெரியாது - ஏன் பிறக்கிறோம்
என்றுகூட தெரியாது !
சிலருக்கு வரிகளினால்
வந்து குவிவோம் - சிலருக்கு
வந்ததால் வெந்து குழைவோம் !

கள்ளத்தோணிகளில்
நாங்கள் கடத்தப்படுவதுண்டு !
எங்கிருந்து கடத்தப்பட்டோமோ
அங்கேயே வந்து விழுவோம்
வெவ்வேறு வாசல் வழி !
முறைவாசல் தவறி
இழுத்து வரப்படும் எங்களை
வெற்றியின் சின்னமாய்
அறிவிப்பது அபத்தமன்றோ ?

நயவஞ்சகம் தலைகேறிய
சிலரின் கைகள் - மலைப்
பாம்பாய் உருமாறி
எங்களுள் சிலருக்கு
எமனாவதுண்டு - எதிர்
புள்ளியாய் பிறழ்ந்து !

எங்களை
பெறாதவர்கள்
பொறாமைப்பட வேண்டாம் !
பெற்றவர்கள்
பெருமைப்பட வேண்டாம் !
பெறாதவர்கள் - கவனம்
தீட்டி வரி வார்க்கவும் !
பெற்றவர்கள்
பெற்றதில் எத்தனை தாங்கும்
தம் கற்பனை என்று
கூட்டி சரி பார்க்கவும் !

ஏனெனில்...
நான் கணினியின்
திரையில் - மின்னணு
எலி - உம் கண்ணோடு
முத்தமிடுகையில் வந்து -
விழும் - எண்ணிக்"கை" !
முத்தமிடும் நொடியில்
மற்றோர் எண்ணக்"கை"
நீள்வதை பொறுத்தே
என் நீட்சி - உன் ஆட்சி !

வெற்றிக்கும் எங்களுக்கும்
சம்பந்தமுண்டு - திறமைக்கும்
எங்களுக்கும் என்ற வினாவுக்கு
விடையளிக்கும் அதிகாரமில்லை...
விடையொன்றும் அதி காரமில்லை
இல்லையென உண்மை சொல்ல
மனமில்லை எனக்கு - சொன்னால்
மானம் போகுமெனக்கு !!!!

குறுக்கு வழி வெற்றிகள்
நிரந்தரமில்லையாம் - அதன்
நிறம் தரமில்லையாம் !!!
புள்ளி ராஜாவாக
ஆசைப்பட்டு - பெரும்புள்ளி
ஆகும்முன் - கருப்புள்ளி
பெற்றிடாமல் - சிறுபுள்ளி
எனினும் - நம் இதயத்தின்
கசடுகளின் கூடாரமாய்
குறுகவிடாமல் - நேர்மையின்
வழியேறி - நல்லோர் விழியேறி
விருந்து படைப்போம்
பறந்து வா தோழா....!

(மேற்காணும் கவிதை தளத்தின் புள்ளிகள் தம்மைப்பற்றி பாடுவதாக வரையப்பட்டுள்ளது...இது யாருடைய மனதையும் புண்படுத்த எழுதப்பட்டதல்ல....பண்படுத்தவே எழுதப்பட்டது...தக்க தருணத்தில் நல்லதொரு தலைப்பருளிய தோழி ஹுஜ்ஜா என் நன்றிக்குரியவர் ! )

எழுதியவர் : வினோதன் (19-Feb-13, 12:44 pm)
பார்வை : 191

மேலே