இருபது ரூபாயும் ஒரு கவிதையும்....

உச்சி வெயில் நேரம்
உண்டு முடித்த நேரம்
சுகமாய் செவிக்குள்
இசை கேட்டு நடக்கையிலே..
பின்னால் ஒரு பிஞ்சு
அழுக்கு சட்டை
கண்ணில் கண்ணீர்...
அவன் உதட்டு முனங்கல்கள்
எனக்கு கேட்காமல் போனது
இசையில் மூழ்கியிருந்ததால்..
கேட்ட பாடலின்
முதல் பல்லவி முடிந்து
இசை தொடங்கிய போது
"அண்ணா பசிக்குதுனா...."
அந்த கொடுமையான வரிகள்..
அந்த பிஞ்சுவின் வாயிலிருந்து வந்தவை..
இனிமை இசையை நிறுத்தி,
அவனுக்காக திரும்பிய போது,
வெளிவர முடியாமல் துடித்து
வெளிவந்த அவன் வார்த்தைகளில்
கண்டேன் அவன் பசியை...
இருபது ரூபாயுடன்
இந்த கவிதையும்
அவனுக்கு சமர்ப்பணம்...

எழுதியவர் : மாடசாமி மனோஜ் (20-Mar-13, 2:33 pm)
பார்வை : 147

மேலே