போதையில் சுற்றும் பூமி....

வாலை நறுக்க
வாளெடுத்தோரை
பொறுக்கிகள் என்றான்...
வாலைப் பிடித்து
வாழ்க்கை நடத்தும்
வழிப்போக்கன் அவன்
கிறுக்கன்...
--------------------------------------------
உருட்டுக் கட்டைகள் கொண்டு
மிரட்டும் விழிகளோடு வந்தனர்
திருட்டுக் காரியங்கள் செய்யும்
குருட்டு நரிகள்...!
----------------------------------------------
காக்கைகள் கரைந்து
காரிருள் விலகியதாய்
கதைத்தனர் - திடுமென
கங்கையில் குளித்து
கறை நீங்கியதாய்
கரை ஏறினர்... கண்ணியம் காத்தவர்கள்...!
---------------------------------
இறந்த சிறுவனின்
திறந்த உடலில் - அழுக்குக்
கரை வேட்டி போர்த்தி
கதறி ஓலமிட்டு
வாக்குப் பிச்சைக்கு
வழி தேடினர்...
வாக்கரிசியில் தினம்
வயிற்றுக்கு உலை வைப்பவர்...
-------------------------------------------------
பந்தங்களை
பந்துகளாய் ஆடியவர்
பந்துகள் ஆடத் தடை கோரி
பந்தங்கள் பிடித்தவர் மீது
பந்தல்களில் கூடினர்
நொந்தவர் சாடினர்...
----------------------------------------------------
இன்னும்
செய்திகள் செவிகளை
சேரும் முன்னே...
இடைவெளி விட்டது
தடைபட்ட மின்சாரம்...
-------------------------------------------------
இதற்குப் பின்னும்...
இருந்தாலென்ன
இருண்டாலென்ன
இழிப் போதையில் சுற்றும்
இப் பூமி....