இன்பம்
பகலவன் காலையில்
பகர்ந்திடும் ஒளிதனை
பார்ப்பதில் காணும் இன்பம்
பாலைவன மூலையில்
பருகிட கிடைத்திடும்
ஒரு துளி நீரில் இன்பம்
இளவேனில் காலத்தில்
துளிர்விடும் இலைகளின்
இளம்பச்சை காண இன்பம்
பூச்சிகள் கீச்சிடும்
மின்மினிப் பூச்சியும்
இரவிலே காடு இன்பம்
மழலையின் மொழியிலே
மயங்கிடும் பெற்றவர்
காண்பது கோடி இன்பம்
மகளாக வந்தவள்
தாயாக் நிற்கையில்
மறவாது கூடும் இன்பம்
இரவிலே நிலவிலே
இளமங்கை இதழ்களில்
பதித்திடும் முத்தம் இன்பம்
இளந்தமிழ் சொல்லதை
இனிமையாய் பகர்வதை
கேட்பதில் நித்தம் இன்பம்
தரையிலே படுத்தாலும்
தடையிலா உறக்கமோ
தருவது தினமும் இன்பம்
தளர்விலா மனதோடு
தானம் செய் குணத்தோடு
நோயற்ற வாழ்வு இன்பம்