ஒரு முழம் பூவை சூடும் ஒருவனுக்காய் .
தூக்கம் வராமல்
புரண்டு புரண்டு
படுக்கிறேன்- காரணம்
ஏக்கம் இமைகளில்! .
ஒரு முழம்
பூவை சூடும்
ஒருவனுக்காய்
காத்திருக்கிறது - இந்த
பாவையின் கார் கூந்தல்!
படர்ந்த நெற்றியில்
குங்குமம் பதிக்கும்
ஒருவனின் விரல்களுக்காய் -இந்த
பாவப்பட்ட பாவையின்
நெற்றி காத்திருக்கிறது !
பலவண்ண கைவளையல்
அணிவிக்கும் ஒருவனுக்காய்-இந்த
கையாலாகாத கன்னியின்
கைகள் காத்திருக்கிறது .!
பருவம் வந்து
காலம் பல கடந்து நிற்கும்
யாரும் பாரா முகமாய்
கிடப்பில் போடப்பட்டுள்ளது
என் இளமை .
முந்தானை முடிச்சு போட
முண்டியடித்து வரும் ஒருவனுக்காய்
என் கண்டாங்கி சேலை
காத்திருக்கிறது .
தீ இன்றி
தீப்பற்ற வைக்கும்
ஒருவனின் தீண்டலுக்காய்
என் இளமை
காத்திருக்கிறது .
மஞ்சள் கையிற்றை
மூன்று முடிச்சு போடும்
ஒருவனின் வருகைக்காக
என் செங்கழுத்து
காத்திருக்கிறது .
நான் அள்ளி
உடுத்தியிருக்கும் சேலை
காத்திருகிறது ஒருவனின்
கசகலுக்காய்.
இப்படி இன்னும் பலபல
காத்திருப்புகள் எனக்குள்ளே
முட்டி மோதிகொண்டிருக்கிறது .
வயது முப்பதை கடந்தும்
என் இளமை வாழ்க்கை
தடம் புரளாமல்
வாழ்க்கை வழிதடம் மாறாமல்
என்னவனின் வருகையை நோக்கி
என் இளமை
நம்பிக்கையோடு காத்திருக்கிறது !
வருவானா ஒருவன்
என் காத்திருப்பிற்கு
ஒரு முற்று புள்ளி வைப்பதற்கு .
*********** நம்பிக்கையுடன் ,சிங்கை கார்முகிலன்