சாமிக் குற்றம்-கே.எஸ்.கலை

இந்திரன் வெறிப் பிடித்து
தந்திரமாய்ப் புணர்ந்த போதும்-
கெளதமர்கள் தெனாவட்டாய்
அகலிகைகளை சபித்துவிட்டு
உத்தமாராய் உலாவுகிறார்கள் !
இந்திரனை நோக்கி இன்னும்
இரு கைகள் குவிகிறதே.....?

ஒருவனுக்கு ஒருத்தி-
என்பதுதான் தமிழனின் பண்பாடாம்!
தமிழ்ச் சாமிகளே, ஆசாமிகளோ?
பக்கத்தில் ஒன்றும் கக்கத்தில் ஒன்றும்
வைத்துக் கொண்டு வழிக்காட்ட
எப்படி முடியும் முருகனுக்கு?

சிதையாமல் திரும்பி வந்தும்,
தீக்குளித்துக் காட்டினால் தான்
சீதைக் கூட பத்தினியாம்..!
இருந்தாலும் இராமர் சாமிக்கு
கோவில் கட்டி கும்பிடுவார் !

தீராத விளையாட்டுப் பிள்ளை,
வெண்ணைத் திருடன் கண்ணபிரான்
கீதை சொன்ன மேதையாம்.....!
அப்படியொரு பெண் அன்று
ஆடிப்பாடி களித்துவிட்டு,
கீதை சொல்ல வந்திருந்தால்
ஏற்றுக் கொள்ளுமா இந்தப் பூமி ?

மாதவியரை
மன்னித்துக் கொண்டே இருந்தால்
கண்ணகிகள் கடவுளாகவே இருப்பார்கள் !
புத்தி எரியும் பூமியிலே
பத்தி எரிவார் பத்தினிகள் !
தட்டிக் கேட்கத் தொடங்கிவிட்டால்
பெண்களெல்லாம் தறுதலையாம் !

மோகமும், போகமும், தாகமும்
தணித்துக் கொண்டு
தசையும், தோலும் சுருங்கும் நேரம்-
தேவை ஞானம் என்று சொல்லிப்
புத்தனாக ஆசைப்பட்டு – ஆசைவிட்டு
தேடிப் போவார் போதிமரம் !
=======
நித்தியானந்தாக்களையும்
பிரேமானந்தாக்களையும்
தண்டிக்க - தட்டிக் கேட்க
எந்தச் சாமி தகுதியோடு
இருக்குதிங்கே ?

எழுதியவர் : கே.எஸ்.கலை (2-Jun-13, 12:39 pm)
பார்வை : 590

மேலே