உப்பளங்கள்
மனிதன் நேர்த்தியாக
கட்டிய பாத்திகளில்
உலரும்
பூமியின் மேலாடைகள்.
உவர்ச் சேற்று
வயல் வெளிகளில்
நாளும் பொழுதும்
கதிரவன்
அரவணைப்பிற்காய்
தவம் கிடந்தது
காய்ந்து
தன்னை ஆவியாய்
தியாகம் செய்யும்
நீர் நாற்றுக்கள்.
பரந்து கிடக்கும்
உருவம் சிறுத்து
அலைந்து திரியும்
மூலக் கூறுகள்
இறுக இணைந்து
பௌதீக நிலை
மாற
முதிர்ந்து வெடித்த
தானியக் கதிர்கள்.
தம்மை வளர்த்து
விட்டவன் கண்களையே
குருடாக்கும்
ஒளிக்கற்றையை
தெறிக்கும்
நிமிர்ந்து நிற்கும்
பளிங்குகள்.
மீண்டும் தன்
உருவத்தைக்
கலைக்கும்
மழைக்கு ஒளித்து
சிப்பிக்குள்
வெண் முத்துக்
குவியலாய்
அறுவடைக்கு
ஆயத்தமாகின்றன.