+அறிவுத்தீனி+
இந்தக்கால குழந்தைகள்
காலையில் சீக்கிரமாக
எழுவதே சிரமம்...
இதில் பள்ளிக்கு வேறு
கிளம்ப வேண்டும்
வேக வேகமாய்
ஏதோ ஒலிம்பிக் போட்டியில்
பதக்கத்திற்காய் ஓடுவதைப்போல்
பள்ளிக்குச் சென்றதும்
ஆசிரியரின் மிரட்டலில் கொஞ்சம்...
படிக்கும் பாடத்தில் கொஞ்சம்...
இடைவேளை உணவில் கொஞ்சம்...
விளையாட்டாய் விளையாட்டில் கொஞ்சம்...
தோழன் தோழி நட்பில் கொஞ்சம்...என நேரம் கடத்திவிட்டு
பள்ளி முடியும் வேளையிலே
வீடு நினைவு வர
தம்பி தங்கையை ஆசையாய்
பார்க்கவரும் கனவோடு...
வந்தவுடன்
அவசரமாய் தின்பண்டம் கொஞ்சம்...
களைப்படைய செய்யும்
அதே கார்ட்டூன் கொஞ்சம்...
அது முடியும் முன்னே
அழுகையுடன்
ஆடலுக்கோ
பாடலுக்கோ
வேறு ஏதும் வகுப்புக்கோ
விரைந்தோட வேண்டும்
முடிந்து வீடு வரும்போது
சிறிது இருட்டி இருக்கும்...
அசதியுடன் வந்து
ஏதோ உணவை
உண்டு முடிக்கும் முன்னே
உறக்கம் பொத்துக்கொண்டு வரும்...
எந்திரகதியில் ஆரம்பிக்கும் வாழ்க்கை
எந்திரத்தனமாகவே செல்கிறது இவர்களுக்கு...
இன்றைய குழந்தைகளுக்கு
அறிவுத்தீனிக்கு
வழியே இல்லாமல் போய்விட்டது...
மதிப்பெண்களை
நோக்கி மட்டுமே வளர்ப்பு...
மதிப்பிழந்து போனது
அவர்களின் சிறுவயது!