வெத்தல போட்ட அம்மன்.

தவறான பிறவியென தீண்டப் படாமல்
எவராலும் மதிக்கப் படாத ஒருவன்
சுவரோரம் ஒண்டிச் சீவனம் நடத்தி
சுகமாய் தூங்கிக் காலம் கழித்தவன்
நீண்ட கைகளின் இறுக்கிப் பிடியில்
நீலக் கிளிக் கரகத்தைத் தாங்கி
பூண்ட நல்வேட வேடிக்கை சிறக்க
பூமியிற் காலைப் பதியாமல் பதித்து

தாண்டியும் குதித்தும் குனிந்தும் துள்ளி
தூண்டிலாம் கொக்கோ கோலாவைக் கண்டு
பாட்டிலைக் கவிழ்த்துக் குடித்து மூடிய
கண்களில் ரூபாய் தாளினை எடுத்து
வாண்டுகள் கைகளைத் தட்டியே சுற்றிட
பெண்டுகள் வாயைப் பிளந்து நோக்கிட
டண்டணக்க டண்டணக்க மேள இசையில்
பெருமிதம் கொண்டு ஆடிடும் அந்த

செத்துக் கிடந்த சண்டைக் கோழி
முத்து மாரியின் கருணை அருளால்
பத்து ரவுண்டு குடித்த பின்னும்
பத்தலை என்று மடித்து ஆடிட
பித்தளை நகையில் பளபளவென்று
வெத்தலை போட்ட சிவந்த வாயுடன்
அத்தனை பேரையும் வேடிக்கை பார்த்து
அம்மன் வீதியில் உலா வருகிறாள்..

எழுதியவர் : தா. ஜோ ஜூலியஸ் (26-Aug-13, 2:58 pm)
பார்வை : 72

மேலே