என் நண்பனின் எமனுக்கு
சிறு தயக்கமுமில்லாமல், என் அனுமதியின்றி
எந்தன் நண்பர்களின் எண்ணிக்கையில் ஒருவனை உன்னுடன் எடுத்துக் கொண்ட உன் மடமைக்கு -
நட்பு என்னும் நீதிமன்றத்தில் - தண்டனை தந்தாலும், அது என் நட்பிற்கு கலங்கமே . . . !
எவனிடமும் பகட்டுத்தனம் காட்டாமல்;
அவன் தேவைகளை ஒருமுறைகூட
உன்னிடம் மண்டியிட்டு முறையிடாமல் -
அவனே தேடிக்கொண்டதால் -
உந்தன் அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்
என நினைத்தாயோ . . . !
எமனே . . . !
உன் பதவி பறிக்கப்படும்;
கோட்டை கவரப்படும்;
உன் அரக்கர்கள் அடிமைப்படுத்தப் படுவார்கள்;
எருமை வாகனம் ஏறும்பாகும்;
கருணை மனங்கள் செத்துப்போகும்;
காரணம் கேட்க எவனும் இருக்கமாட்டான்;
கட்டளையிடும் உன் பாசக்கயிறு - என் நண்பனிடத்தில் இருக்க . . . !
கொடுமைக்காரனே . . . !
நண்பனின் கட்டளைப்படி ஒருமுறை மனிதனாய் மண்ணில் உதிக்கப்படுவாய் அவனைப் போலவே அவன் உருவத்தில் . . . !
பிணந்தின்னும் ஈசனுக்கு பணியாளன் நீ;
உனக்கு என் நண்பனன்னையின் அன்பு கிடைக்கும்;
தந்தையின் பாசம் கிடைக்கும்;
அவன் உடன்பிறப்புடனான உரிமைகள் கிடைக்கும்;
ஆனால் ஒன்றை நன்றாக நினைவில் கொள் . . . !
என் நட்பொன்றையும் பெற்றிடலாம்
என்றெண்ணி - என் இடம் தேடி நகர்ந்தால் -
உன் மரண வாசல் நோக்கி நீ புறப்பட்டு விட்டாய் எனப் புரிந்துகொள் . . . !
நட்ப்பெண்ணம் கொண்டு என்முன் வரும்முன்பே எச்சரிக்கிறேன் உன்னை - மதிகெட்ட மூடனே பாசக்கயிற்றால் பின்னப்பட்ட மரணப்படுக்கை ஒன்றுள்ளது என்னிடம் - உன் வருகையை எதிர்நோக்கியே . . . !
உன் உயிர்பறிக்க, மனதில் தயக்கம் கொண்டிருக்க நானொன்றும் உறவினன் அல்ல;
கேவலம் அவன் உணவை பகிர்ந்துண்ட
நண்பன் . . . !