எது நடந்தால் எனக்கென்ன?

குடியை குடித்து அதுஅவன்
குடும்பத்தை கெடுத்து
அழிந்துபோகும் அவலம்!

தொடர்ந்து நடக்கட்டும்
வாழும்நாட்டை வீணடித்து
வகையற்றதாக்கட்டும்!

தரங்கெட்டு மானங்கெட்டு
தறிகெட்டு தவறிழைக்கும்
தன்மானமில்லா ஆண்கள்!

பெண்களையும் சிறுவர்களையும்
பயங்கொள்ள வைக்கட்டும்!
என்னை சுற்றி எதுநடந்தாலென்ன?

ஆழ்துளை கிணறுவெட்டுவான்
வருடந்தோறும் உயிரோடு
ஒருகுழந்தையை புதைப்பான்!

தடுக்க என்ன தடுமாற்றமடா?
சரியான சட்டமில்லை!
செயல்படுத்த லாயக்கில்லை!

பள்ளிக்கு செல்லும் வாகனமே
பிள்ளையை நசுக்கி
எமனாகிவிடும் கொடுமையடா!

தடுத்திடும் சட்டங்கள்
இன்னும் வருகிறது!
ஒழுங்குபடுத்த முடியவில்லை?

உணவிற்கு வைத்ததீ
உடலெரிக்கும் கொல்லியானதே!
அடைத்துவைத்த ஆட்டுக்குட்டியாய் குழந்தைகள்!

பிஞ்சுகளை இழந்து பெற்றோர்கள்
அன்று கதறிய கதறல்கள்
நினைத்தாலே காதுவலித்து இதயம்கிழிகிறதே!

இனியும் இதுபோல் நடக்காதென்று
உறுதியாக எவனும் இன்றும்கூட
சொல்லமுடியுமா? ஏனடா ஏன்?

இவையெல்லாம் தொடர்களாகி
தொலைக்காட்சி செய்தித்தாளென எதிலும்
வந்துகொன்டிருந்தால் எனக்கென்ன?

அவன் உள்ளே நுழைகின்றான்
இவன் இடத்தை பிடிக்கின்றான்
சின்னப்பயலும் வாலாட்டிப்பார்க்கிறான்!

உன் உரிமையை ஒருவன் பரிக்கிறான்
உன் உடமையை ஒருவன் எடுக்கிறான்
உன் உணர்வை ஒருவன் சீண்டுகிறான்

வேடிக்கை என்னடா வேடிக்கை?
இந்திய சிப்பாய்கள் அங்கே நிற்பதெதற்கு?
விடுப்புகொடுத்து வீட்டிற்கு அனுப்பு!

அதையாவது அவர்களை
ஒழுங்காக செய்யவிட்டு!
தன்மானமெல்லாம் தரையோடு அழியட்டும்!

தன்நாட்டு மக்களைப்பற்றியும்
சரியான மாற்றங்களைப்பற்றியும்
எவன் யோசிக்கிறான்?

பணப்பித்தர்களின் அரசியலில்
பொதுநலம் எங்கே வாழும்?
நாடெங்கும் சுயநல சாக்கடை!

விவசாய விலைநிலமெல்லாம் விசம்!
விலைந்த பயிரெலாம் வேதிப்பொருள்!
இறக்குமதி பண்டமெல்லாம் இரசாயனம்!

தின்றுதீர்ப்பவன் உடம்பிலெல்லாம்
விசம்விசம்! நினைப்பெல்லாம் நஞ்சு!
எதை சொல்ல? மரமண்டைக்கு!

தலைவா தலைவா என்று
தவம் கிடந்தாயே!
எவனாவது கிழித்தானா உனக்கு?

பாலபிசேகம் காவடியென்று
படையல் போட்டாயே!
எனக்கு தேவையில்லையென்றானா ஒருவனாவது?

ஒரு ஏழைக்கு உணவளியுங்கள்
முடியாதவனுக்கு எதாவது உதவுங்கள்
என்று என்றாவது சொல்கிறானா?

அவனவன் அவனவனது
சுற்றத்தை வளர்த்துக்கொண்டான்
உன் அறியாமையை பயன்படுத்தி!

தலைவன் தலைவனென்று கூத்தாடுகிறாயே!
இன்னும் இடமிருக்கிறதா
உன் முகத்தில் கரிபூச?

இந்திய ரூபாய் மதிப்பு
குறைந்துபோனாலென்ன?
கவலையில்லை எனக்கு!

அன்னியன் குளிர்பானமும்
அன்னிய நாட்டு தீனியும்
அவனனுப்பும் பொருளும் வேண்டும்!

அவனின் அடையாளங்களையே வாங்குவேன்
என் மொத்த உழைப்பும்
அவன் நாட்டிற்கு போனாலென்ன?

அயல்நாட்டு பொருளென்று அழகுபார்ப்பேன்
என்இந்திய ரூபாயின் மதிப்பும்
அவன் காலடியில் கிடந்தாலென்ன?

இவன் இப்படியே இருந்தால்
ஒவ்வொரு நொடியும்
உருப்படாமல்தான் போகும்!

அடிமேலடி! இடிமேலிடி!
எத்தனை விழுந்தாலென்ன?
யார்யாரெல்லாமோ உமிழ்ந்தாலென்ன?

சிந்தனை விற்றதனால் சொரணையில்லையோ?
உணர்வு மறத்ததனால் மனவலியில்லையோ?
தன்மானம் செத்ததனால் உயிரேயில்லையோ?

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (13-Sep-13, 9:42 am)
பார்வை : 776

மேலே