எப்படியோ....தொலைந்து போனேன்....

நான் விரும்பிய எனது முகம்....

எப்படித் தொலைந்தது...
என எனக்குத் தெரியவில்லை.

எனக்குள்....
நீ நிரம்பிய ஒரு கணத்தில்...
கழன்று விழுந்திருக்கலாம்
எனது முகம்.

நீ நிரம்பியதில்...

மூழ்குதல்....

என் இயல்பாகிவிட

நினைவுகளும்...தனிமைகளும்...
கிளை பரப்ப...

மிதக்கத் தெரியாத...
கனங்களால் நிரம்பிய
மரமாகிக் கொண்டிருக்கிறேன் நான்.

ஒரு ஒற்றைப் பறவை...
சிறகுதிர்த்துத் திரியும் வானத்தில்...
காற்றின் துயரம்
அலைகளாவதைப் போல...
வரிகளற்ற கவிதை ஒன்று...
தன் துயர அலைகளோடு
என் வாழ்வின் பாடலாகிக் கொண்டிருக்கிறது.

உன் இசைவின்மையின்
துயரம் தாளாமல்...
என் மேல் வீசாத
காற்றின் திசையில்
அலைந்து திரியும் எனது முகத்தினை...
அனுதாபங்களின் சித்திரமாய்
வரைந்து தீர்க்கிறது காலம்.

வாழ்வு...
வெறும் கனவாகி...
தொடர இயலாததாகிவிட..
வழியறியாத...
உன் வண்ணத்துப் பூச்சியின் சிறகுகள்..
என் மேல் உதிர்ந்து கொண்டிருக்க...
திசையற்ற பாதையில்...
அழிகிறது என் தடங்கள்.

வழி தவறி வந்த...
ஒரு தேவதையாய்...
நீ திரும்பிப் போய்விட...

தனிமை நிரம்பிய
என் சுவர்களுக்குள்...
முளைத்துக் கொண்டிருக்கிறது
என் சிறை.

இனித் திரும்ப இயலாத
ஒரு நெடும் தொலைவில்
நிற்கும் என் காலம்...

என் கையறு தன்மையைச் சீண்டியபடி...

வஞ்சகக் கனவுகளின் வழியாய்...
பயணிக்கச் சொல்கிறது...
என் வாழ்வின் வெற்றிடங்களை.

வாழ்தலின் துயரம்...
அறிவதற்கில்லை....
தன்னைத் தொலைத்தறியாதவர்களுக்கு.

எழுதியவர் : rameshalam (30-Sep-13, 7:48 pm)
பார்வை : 82

மேலே