@@@ முகாரி @@@

உள்ளத்தின் எழுச்சிப்பொங்க
உணர்வுகள் கொந்தளிக்க
உரிமையாய் நானென
உனக்காக இருகிறேனென்ற
உரியவனின் வார்த்தையில்

சொல்லமுடியா உணர்வுகள்
மெல்லமாக எழுந்துவந்து
வெள்ளமாக பொங்கியும்
வெளிப்படுத்த முடியாநிலையில்

ஊமையாய் நிற்கவைத்த
காரணங்கள் ஆயிரமிருந்து
கண்ணீர் மழைபொழிந்து
கைகள் பிசைந்துகொண்டு
கன்னியவள் நிற்கிறேன்

ஆயிரமாயிரமாய் வீரியம்
கொண்டு அழுகையும்
புலம்பலுமாய் அவசரமாய்
ஏனோ கண்ணீர் கொட்ட
உணர்வுகளை கட்டிப்போட்டு
மன்றாடுகிறாள் இவள்

பெண்மையின் மென்மைதாண்டி
காதலின் வேகம் தாண்டி
மாயக்குரலின் பிடியில்
மங்கை மயங்கியும்
எப்படித்தான் கட்டிப்போட்டாள்
அவள் உணர்வுகளை

கொழுந்துவிட்ட உணர்வுகள்
கொப்பளமாய் வெடித்துவிட
கொந்தளித்த என்இதயத்தில்
தத்தளித்த தருணம்
அம்மம்மா வேதனையின்
விருட்சமாய் விளங்கியிருக்குமே

சுண்டி இழுக்கும் பேச்சு
சுடராய் ஈர்க்கும் வார்த்தைகள்
யாழினை மீட்டும் குரல்
எங்கும் கேட்டிடும் ஒளியாய்
என் உள் நரம்புகளும் சென்றுவர
முறுக்கேரிடும் மேனியையும்

ஓட்டமான ரத்தநாளங்களையும்
எப்படி கட்டிப்போட்டேன்
காதலின் மிச்சமா
இல்லை அன்பின் உச்சமா
அவனின் காதல் எச்சமா
கரைந்து போகிறேனே

என்னுள் நீயும்
உன்னுள் நானும்
கரைந்துப்போய்
இறுதியில் நம்முள்
கண்டோமே காதலை

என்வலி தங்காதென
எனக்குமாய் நீ சுமந்த
வலிகள் இன்று
வழிதெரியாமல் போகுமே
உன் வாழ்வையே என்வாழ்வென
எண்ணிய எனக்குவலிக்கிறதே

மருந்தில்லாமல் வலி
பொறுக்க முடியாமல்
துடிக்கிறது என் இதயம்

கண்ணீரில் தொடங்கி
கண்ணீரில் முடித்து
கானல் நீராக
காணாமலே போனது
கண்போன்ற நம்காதல்

காலங்கள் மாறிட
காதலும் மாற்றம்பெற
மறுபிறவி கிட்டாதா

வேலியாக உறவுநிற்க
வெட்டியெறிய விருட்சமாய்;
வெட்டினால் போவது
உன்னோடு என்னுயிரும்

அனலாய் கொந்தளிக்கும்
என் ஆழ்மனதுள்
ஆற்று நீரும் ஊற்று நீரும்
ஊற்றி அணைத்தும்
அணையாது எரிகிறது
உன் அன்பின் நாட்கள்

அணுவும் நுழையாத
என் இதயத்தில்
அணு அனுவாய்
நுழைந்து அனுதினம்
ஆட்சி செய்கிறாய்

அன்பிலே ஆட்க்கொண்டாய்
அழகாய் அலங்கரித்த
அன்பான வாழ்வில்
அந்தரத்தில் நிற்கிறேன் நான்

மரணத்தின் வலிதனை
அணுஅணுவாய் அனுபவிக்கிறது
என் இதயம் ;அன்பின் அழகில்
நாம் வாழ்ந்த நாட்களும்

நினைவுகளின் ரணமாகி
என்னை கடந்து செல்ல
மறுத்து, நினைவுகளால்
என்னை வாட்டி வதைக்கிறதே

வார்த்தை வரவில்லை
மனம் ஆயிரம் மொழி
பேசுகிறது புரியாமல்
இதயமே இருண்டு
காட்சியளிக்கிறது என்னுள்

வழிதேடி ஒளிபெற
விரும்பாமல் மனம்
ஏனோ ஆழ்ந்த அமைதி
தேடி அலைகிறது

இவள் கேட்டுரசித்த
இனிய ராகங்கள்
இன்று பாடுகிறது
அனைத்தும் முகாரி...

(ஒரு காதல் பிரிவில் காதலியாகிய பெண்ணின் மனம் புலம்பும் ஒரு சூழலாக எடுத்து முகாரி எழுத முயற்சி செய்ததன் வெளிப்பாடாய் இங்கு முகாரி )
...கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (4-Oct-13, 10:42 am)
பார்வை : 179

மேலே