மனமே தாஜ்மஹால்

என் மன வனத்தில் மலர்ந்ததை விடவும்
மடிந்தவை ஏராளம் - பெண்ணே
உன்னிடம் சொல்ல இயன்றதை விடவும்
முயன்றது தாராளம்.
எதையோ நினைத்து எதையோ சொல்ல
என் மனம் ஆராயும் - அதில்
எனக்கே புரியா ஆசைகள் எண்ணக்
கடலினில் அலை பாயும்

கண்களை விற்று சித்திரம் வாங்குதல்
கற்றவர் செயலில்லை - தன
சிறகினை இழந்து சிகரம் அடைந்திட
பறவைகள் பறப்பதில்லை
நட்பின் வழியே காதலைக் கொண்டவர்
நிச்சயம் தோற்பதில்லை - உன்
நட்பிற்காக காதலைக் கொன்றேன்
எனக்கென யாருமில்லை.

என்றோ ஒருநாள் எனை நீ பிரிந்து
போவாய் நிச்சயமாய் - பார்
அன்றென் விழிகள் குருதியில் நனைந்து
மூழ்கிடும்; அச்சமயம்
உடலால் பிரிந்துமென் உயிரில் வாழுமுன்
நினைவே என் வடிகால் - தினம்
உயிராய் உனையே முழுதாய் தாங்குமென்
மனமொரு தாஜ்மஹால்.

எழுதியவர் : ஏ.கே.பிரான்சிஸ் (12-Jan-11, 1:14 pm)
Tanglish : maname tajmahaal
பார்வை : 536

மேலே