எழுத்தில் திரு விளையாடல்

எழுத்திலுந்திருவிளை யாடல்;
வலுத்ததும் வளம் தேடல்.
கவிஞர்களின் வாதங்கள்;
கருத்து மழை சாதங்கள்.
பொறுத்திருந்து பாருங்கள்;
பொங்கி வரும் தேறுங்கள்.

சச்சரவுகள் ஆகியெழும்;
உச்சமது நன்மையாகும்.
பண்டுத் தேடும் ஓசைகளும்;
சண்டையல்ல விசையாகும்.
சோதனை வினைத் தேற்றம்;
மோதலென்றால் பிழை மாற்றம்.

களம் ஒன்று கிடைத்தது;
கருத்தாடத் தேர்ந்தது.
கலைஞர்கள் கூட்டமிது;
கருத்துப்பிழை நாட்டாது.
எழுத்திதைத் தந்தது;
வழுத்தவே வாயாடுது.

கவிஞர்கள் பல வகை
காலங்கண்ட உண்மையிதை;
அப்பப்போத் தமிழறிவை
ஐயம் போக்கும் பலர் புரிவை;
செப்பும் வித அழுத்தங்களை
தப்பென்பதென்ன வினை?

விட்டு விடுங்கள் அவர்களை;
முட்டிக் கொள்ளமாட்டார்கள்.
பெட்டகத்தைத் திறக்கட்டும்;.
கொட்டி அதைக் காட்டட்டும்.
நட்டம்தான் அதனாலென்ன!
நமக்கது லாபம்தானே!

முடிச்சுகளைத்தானே-
முயன்று அவிழ்க்கிறார்கள்.
பிரச்சனைகள் தீரத்தான்-
பிரித்து மேய்கிறார்கள்
விலாங்குகள் அகப்படுமா--எனக்
கலக்கித் தேடுகிறார்கள்.

வேடிக்கை அல்ல இது;
வாடிக்கைதான் பொறு.
வாதங்களைக் கவனி;
வந்துவிழும் முத்தணி.
ஆழத்தின் புதைவெலாம்;
அத்தனையும் மின்னலிடும்.

இடியிடித்து மழைசொரியும்
வெடிவெடித்து ஒளிபொரியும்.
சலசலத்துத் தென்றல் வரும்.
கலகலத்துத் கானம் தரும்.
கடகடத்து தடந்துலங்கும்.
தடதடத்து இடம் விளங்கும்.

கொட்டாத மேளமுண்டோ!
தட்டாத தாளமுண்டோ!
கொட்டுவதும் தட்டுவதும்,
கெட்டிமேள மங்களமாம்.
கிட்டுவது நலமேதாம்.
எட்டுவதும் சுபமேதாம்.

எழுத்து ஒரு பலைகையாம்.
எழுதியே பழகுவோம்.
வழுத்துவோம் எழுத்தையாம்
வளருவோம் உயருவோம்.
எழுதுவதும் எளிதில்லையாம்
உறக்கந்தொலைத்த உழைப்பாம்.

எழுத்து ஒரு பள்ளிக்கூடம்:
இணைவரெலாம் மாணவராம்.
மாணவரே ஆசிரியராம்:
ஆசிரியரே மாணவராம்.
மாறி மாறிக் கற்பிக்கிறோம்.
மாறி மாறிக் கற்கின்றோம்:

புள்ளிகளும் தேர்வுகளும்;
பொருட்டில்லை வளரவும்.
அள்ளிட வேறெதுவும்;
அன்பு நட்பாம் நிகருண்டும்?
சொல்லுவோம் கவிதைகளும்;
வெல்லுவோம் வருங்காலம்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (31-Oct-13, 11:28 am)
பார்வை : 106

மேலே