அடுத்த பொறப்புல

விடியற்காலை சூரியன
எழுப்பி விடும் முன்னே!
வியர்வை விழுந்தாத்தான்
கூலி விழும் எங்களுக்கு!

என்னதான் உழைச்சாலும்
மதியான கஞ்சிக்கு உப்பில்ல!
இனிமேலும் உழைக்க
உடம்பிலே தெம்பில்ல!

ஒருரூவா கூடகேட்டா
நாளைக்கு சேர்பதில்லை
கொடுக்கிறதா குடுங்கைய்யா
அதில் ஒன்னும் தப்பில்ல!

ராத்திரி பகலுன்னு
ரெண்டு கண்ணு பூமிக்கு!
ரெண்டு கண்ணா பொண்ண
கொடுத்த புண்ணியம் சாமிக்கு!

வெள்ளம் மூழ்கின
தாமரை தண்டா!
கண்மூடி முழிக்கும் முன்னே
தோளுக்கு மேலே வளர்ந்து நின்னா!

அஞ்சிபவுனு சீதனமும்
அம்பதாயிரம் ரொக்கமும்
கட்டின சேலையோட
அனுப்பின போதும் !

ஆடுமாட வித்து
கோழிகுஞ்ச வித்து
கஞ்சி சோளம் வித்து
அஞ்சிபவுனு சேர்த்தேன்!

களையெடுத்த காசுல
கால்கொலுசு எடுத்தேன் !
சிறுவாட்டு காசத்தான்
சீதனமா கொடுத்தேன்!

நாளுமாசமா மகளே!
நல்லாதானே இருந்த!
கையுங்காலும் இருக்கும் போது
காசுகென்ன கவலை!

நாளும் பொழுதும் வேலைசெஞ்சா
வராது மகளே பஞ்சம்!
கல்யாணம் முடிஞ்சதுன்னா
கணவன் தானே தஞ்சம்!

பால வித்துபுட்டு
பட்டசாராயங் குடிச்சா
பகலெல்லாம் சுத்திபுட்டு
படாத இடமெல்லாம் அடிச்சா!

பாவிமகளே நீ
பாலுங்கெணத்திலா குதிச்ச!
பசும்பாலும் கள்ளிபாலும்
வெள்ளைன்னு தானே நெனைச்சோம்!

எங்க பாடே பெரும்பாடு
நீ வந்தா இறங்காது சாப்பாடு!
செத்தாலும் உம்பாடு !
தெரியாது புறப்படு!

தாய்வீட்டில் நாகிடந்த தரமில்ல!
தனியா வாழ நெஞ்சில் உரமில்ல!
நாயவால் புருஷன் திருந்தவில்லை!
போய்வாரேன் ஆத்தா!

போகுமுன்னே
வரமொன்று கேட்பேன்!
அடுத்த பொறப்புல உன்னைவிட்டு
போகாத நாயா பொறக்கணும்!

எழுதியவர் : கோடீஸ்வரன் (11-Nov-13, 7:55 pm)
பார்வை : 87

மேலே