விளைநிலங்களா விலைநிலங்களா
கையளவு விதைகளை வீசிச்சென்ற உனக்கு
மடி நிறையக் கொடுத்தேன் - அன்று
வறியவர், எளியவர் என வந்தவர்க்கெல்லாம்
வாரி இறைத்தக் கைகளும் - உனதே
"பசி"யென வந்தவர்க்கும், "புசி"யென கொடுத்தாய்
என்னில் நீ பெற்ற செல்வங்களை...!
உனக்கும் தெரியாமல் எறும்புகளுக்கும்,
பறவைகளுக்கும் உணவு விளைவித்தாய்
ஆண்டின் மாமழை பொய்த்த போதும்
சோற்றுக்கு பஞ்சமில்லை உன் வீட்டில்
பண்படுத்த என்னை பிளந்த போதும்
நீ என்னால் பெற்றது மகிழ்ச்சிதானே...!
இத்தனை பயன்களையும் நீ மறந்து
என்னைக் கூறுபோட துணிந்தது என்ன?
கரையான் புற்று இருந்த இடத்தில்
இன்று கான்கிரீட் அடுக்கு மாளிகைகள்
மடி நிறையக் கொடுப்பேன் என்று
பணத்தையும் வீசி விதைத்தாயோ..?
வெகு விரைவில் உணருவாய்
பணத்தை தின்ன முடியாதென்று.....!
"விளைநிலங்களை "விலை"நிலங்களாக்காதீர்..!"