உண்மையான பொங்கல்
உழுதவன் தினமும் அழுததை யுணர்ந்து
==உளமது குமுறிய விசும்பு. சிலநாள்
அழுதது அதனால் நனைந்தன வயல்கள்.:
==அரும்பிய கதிரும் சிரித்தது. தெய்வம்
தொழுதவ னுயிராய் வளர்த்தது முதிர்ந்து
==துயரது துடைத்திட தொடங்கிய தாலே
பழுதிலா அறுவடை செய்தவன் நெஞ்சம்
==பாங்குடன் பொங்குமே பரவசப் பொங்கல்.
வயலெனக் கிடந்த நிலங்கள் இன்றில்
==வசதிப் படைத்தோர் வாழ்ந்திட வென்று
உயர்ந்து நிற்கும் கட்டிட மாக
==உருவ மாற்றம் கொண்டிடும் போதும்
அயரா தென்றும் கமத்தொழில் புரியும்
==அகிலத் துழவர் அனவரு மோங்க
தயங்கா தொருமுறை தலைதனை சாய்த்தல்
==தரணியி லுழவனுக் கொருமரி யாதை.
சேற்றினில் உழவன் ஏறுகள் பூட்டி
==செய்திடும் உழவு வாழ்தலின் தேவை
மாற்றிட முடியா சத்திய மிதனை
==மறுத்திட எவர்க்கும் துணிச்சலு மில்லை.
ஆற்றிடு மிவனதுக் கருமம் போற்ற
==ஆண்டுக் கொருதரம் வருகிற திருநாள்
காற்றினில் மறையும் புகையாய் அன்றி
==கல்லோ வியமா தலுண்மை பொங்கல்.
அன்பர்கள். நண்பர்கள், எழுத்துத் தள நிருவாகத்தினர் படைப்பாளிகள் வாசகர்கள் ,அபிமானிகள் அனைவருக்கும் இதயபூர்வமான எனது பொங்கல் வாழ்த்துக்கள்.
மெய்யன் நடராஜ் (இலங்கை) 13-01-2014.