மீண்டும் வேண்டும் இப்பிறவி

வெறிச்சோடிக் கிடக்கிறது மனசு
விடுமுறைக்கு வந்த குழந்தைகள்
விளையாடிவிட்டுப் போன வீட்டைப்போல .
இந்த நிசப்தம்
நினைவுகளைப்
பின்னுக்குப் பிடித்து இழுக்கின்றது .
சாஸ்வதமான நிகழ்வுகள் கூட
பனி மூடிய மலையைப்போல
மங்கலாய்த் தெரியும் .
அக்காவின் கையைப் பிடித்துக்கொண்டு
அழுதுகொண்டே பள்ளிக்குப் போனது முதல்
கல்வி கற்று ,நற்கவிதை கற்று,
அன்பும் பண்பும் கற்று
அநேக உறவுகள் பெற்று
குடும்பம் அமைத்து
குழந்தைகள் வளர்த்து
இன்பமும் துன்பமும் சேர்த்து ........
நினைத்துப் பார்க்கையில்
எல்லாமே சுகம் தான் .
ஒவ்வொரு முயற்சியிலும் ஒரு வேகம்
ஒவ்வொரு துக்கத்திலும் ஒரு விவேகம்
ஒவ்வொரு வெற்றியிலும் ஒரு நிறைவு
ஒவ்வொரு தோல்வியிலும் ஒரு பாடம்
எத்தனை இருக்கிறது
இன்னும் புதிதாய்க் கற்றுக்கொள்ள .
அப்படி இருக்கையிலே
இப்பிறவி போதும்
என்று சொல்ல மனமில்லை
ஒரு பிறவி போதாது உளம் நிறைய வாழ்வதற்கு
மீண்டும் ஒரு பிறவி
வேண்டும் எனக்கிங்கு .