முகவரி

குவா குவா சத்தம்
குழந்தையின் முகவரி.

குறுநகையில் வெட்கம்
குமரியின் முகவரி.

வாழ்க்கையில் வசந்தம்
வாலிபத்தின் முகவரி.

கண்களின் வசீகரிப்பு
காதலின் முகவரி

காதலின் அவசரம்
கல்யாணத்தின் முகவரி.

மணம்வீசி மனமீர்த்தல்
மல்லிகையின் முகவரி

பனித்துளியின் சிலுசிலுப்பு
மார்கழியின் முகவரி.

சூரியனின் வெண்சிரிப்பு
பகலின் முகவரி.

நிலவின் புன்னகை
இரவின் முகவரி.

பூமித்தாயின் மெய்சிலிர்ப்பு
பூகம்பத்தின் முகவரி.

வயோதிபத்தின் இயலாமை
மரணத்தின் முகவரி.

ஏழ்மையிலும் மறவாமை
நட்பின் முகவரி.

காத்திருப்பில் ஏமாற்றம்
காதலியின் முகவரி

நச்சரிப்பின் உச்சகட்டம்
மனைவியின் முகவரி.

நம்பவைத்துக் கழுத்தறுப்பு
சுயநலத்தின் முகவரி.

பூமிக் காதலிக்கு
முகில் காதலன் எழுதிய
மழை கடிதத்திற்கு
வானவில் முகவரி.

ஒலிவாங்கியில் பொய்
அரசியல்வாதியின் முகவரி.

நல்ல பாதையிலும்
தள்ளாடும் நடை
குடிகாரனின் முகவரி

திருவோட்டின் சில்லரை ஓசை
பிச்சைக்காரனின் முகவரி.

வரலாறு திரிபுகளால்
தகராறுகளில் புரளும்
போராட்டங்களால்
சிதைக்கபடுவதோ
ஈழத்தமிழனின் முகவரி

பிறமொழியின் கலப்படம்
நாளையத் தமிழின் முகவரி

வந்தாரை வாழவைத்துவிட்டு
வாழத் துடிப்போரை
ஓரம் கட்டிக்கொண்டு
எல்லாத் தேசங்களிலும்
வாழ்ந்தாலும்
தனக்கென்று ஒரு
தேசமில்லாமை தமிழனின் முகவரி

.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (21-Jan-14, 2:39 am)
Tanglish : mugavari
பார்வை : 357

மேலே