என் காதல் தேவதை
சுந்தரி உந்தன் செந்தேன் தேகம்
சந்திர மண்டலத் திந்திர லோகம்
தந்திரம் இல்லா மந்திர புன்னகை
எந்திரம் மயங்கும் சுந்தர புன்னகை
நாவில் நழுவும் பைந்தமிழ் சொல்லும்
அதிர்ந்தே போகும் ஒவ்வொரு செல்லும்
பாலில் கலந்த பனங்கற்கண்டு
தேவதை என்றால் பொருத்தமும் உண்டு
கூந்தல் அது தான் நெடுங்கருசாலை
ரவி வர்மன் வரையா ஓவியச் சோலை
கட்டி வருவாள் பட்டுச் சேலை
பார்த்து ரசித்ததே எந்தன் வேலை
கண்ணே உந்தன் கடைக்கண் பார்வை
மன்மதன் எறிந்த அம்பின் கூர்மை
பதுமை அவளோ பன்முக பாவை
வாலி எழுதா கற்பனைச் சேவை
பிரம்மன் பெறாத பிறப்புரிமை
கவியில் வர்ணிக்கும் காப்புரிமை
அதுவே எந்தன் சொத்துரிமை
இன்றேல் எனக்கில்லை வாழ்வினிமை
நானே தேடிய ஆயுட் சனி
ஆவாள் காலத்து அற்புத கனி
சிற்பிகள் நம்பா சிற்பத்தின் பணி
அவள் எந்தனுயிர் மாசிலா மணி