உருவங்களின் ரகசியம்

ஒற்றைப் பெண்பிள்ளையை விட்டுவிட்டு அவள் அப்பன் அரசன் பிழைப்புக்காக வேலை தேடி வெளியூர் சென்று வருடங்களாகிறது. ஊர் திரும்பாமலிருக்கும் அவனைப்பற்றி செய்திகள் மட்டும் ஊருக்குள் வந்து கொண்டிருந்தது. கொளஞ்சியை சிறுவயதிலிருந்தே அவளின் சின்னாத்தாள் அழகம்மாள்தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கும் வேறு ஆதரவு கிடையாது. மீசைக்காரர் வீட்டில் பொழுதுக்கும் அடிமை வேலை செய்து, இரவானால் வீடடைவாள், மீசைக்காரர் குடும்பத்துக்கு தன் உயிரை உழைப்பாக்கி கொட்டிக் கொண்டிருந்தாள். அவர்கள் இரண்டு வேளை சோறும் விழாக்காலங்களில் உடுப்பும் எடுத்துக் கொடுத்தார்கள். உடலெல்லாம் பல்லாய் வாங்கிக் கட்டிக் கொண்டாள்.

கொளஞ்சிக்கு படிப்பு ஏறவில்லை. சோற்றுத்தட்டை பையில் வைத்துக்கொண்டு பிள்ளைகளோடு பிள்ளையாய் பள்ளிக்கூடம் போனாள்; திரும்பி வந்தாள். தினம் தினம் வகுப்பில் உதையும் அவமானமும் கிடைத்தன. சோற்றுக்காக பள்ளிக்கூடம் போய் வந்தாள். வாத்தியார் அடித்த அடி சூத்தாம்பட்டை பிரம்பு கனத்திற்கு வீங்கி குப்புறடித்துக் கிடந்தாள் வீட்டில். அழகம்மாள் வாத்தியாரை நடுரோட்டில் வைத்து திட்டித் தீர்த்தாள். அவளின் நோட்டுப் புத்தகப் பை சுவரில் அடித்த ஆணியில் கேட்பாரற்று உரையத் தொடங்கியது.

அரசன் சிறுவயதிலிருந்து மேளம் அடிப்பவர்கள் கூடவே திரிந்து கொண்டிருந்தான். மேளம் தூக்கவும் சாராயம் வாங்கி வரவும் மேளக்காரர்களுக்கு உபயோகப்பட்டான். சமயங்களில் போதை முற்றிய பின் இழவு வீடுகளில் மேள சப்தத்தை ஒப்பேற்ற அவனைத் தட்டச் சொன்னார்கள். அவன் உயிரைக் கொடுத்து, "தொம் தொம்" எனத் தட்டிக் கொண்டிருந்தான். கைவாகு வரவில்லை. பானையிலும் கதவிலும் ஜோராகத் தாளம் போடும் அவனுக்கு மேளத்தில் சொல் கூடிவரவில்லை. விரல்களைப் புரட்டி சுருட்டி கும் கும்மென குத்தி மேளத்திடம் கேட்டுக் கொண்டிருந்தான் தாளம் வராத காரணத்தினை.

கட்டையர் தாத்தா நாதஸ்வரம் சொல்லிக் கொடுத்தார். பிடி கொள்ளவில்லை. தவிலில்தான் முட்டிக்கொண்டு நின்றான். "கழுத போகுது. சொல்லிக்கொடுத்து தொலை" என்றார் கட்டையர் தாத்தா. சம்பிரதாயமாக அரும்பு மீசையை மழித்துக் கொண்டு வந்து நின்றான். "மீசை மழித்ததற்காகவே உனக்கு தவில் சொல்லித் தரவேண்டும்" என்றான் தவில்காரன் கணேசன்.

கணேசனின் சிஷ்யனாக மேளத்தை தூக்கிக்கொண்டு கணேசன் குரூப்பின் நிழலாய்க் கிடந்தான். நோஞ்சான் உடம்பு. தோளில் தூக்கி மாட்டி வாசிக்கத் திராணியற்று கோணிக்கொண்டு நின்றான். எல்லோரும் சிரித்தார்கள். அவர்களோடு அரசனும் சிரித்தான். மேளக்குச்சும் கழியும் பிடிக்க விரல் வளைத்து பழகிக்கொடுத்தான் கணேசன்.

கணேசனுக்கு துணை மேளமாய் இழவு வீடுகளில் வாசிக்கத் தொடங்கினான். ஹர்லிங் முடி வளர்த்தான், தேங்காய் எண்ணெய் தடவி. மேளச் சப்தத்தை ஊர் கேட்டுக்கொண்டிருந்தது. காரியம் முடிந்து ஊர் திரும்பும் நாட்களில் ஓய்வில்லாமல் தவிலைத் தட்டிக் கிடந்தான். பகலில் தூங்கும் மேளக்கார குரூப் அவனைத் துரத்தியது. மேளத்தைத் தூக்கிக்கெண்டு ஓடினான். மேளம் மேலும் மேலும் பல தாளங்களை இசைந்து கொடுக்கத் தொடங்கியது. தாளம் பிடி கொடுப்பதை கணேசன் தூரத்திலிருந்து ரசித்துக் கொண்டிருந்தான்.

வயிசுக்கு வந்து அறை வீட்டிலிருந்து அரசனின் மேளச் சப்தத்தில் தான் வெளிக் கிளம்பினாள் வசந்தா. பதினாறு நாட்கள் வெயில் படாத வசந்தாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் அரசன். அவனது ஹர்லிங் முடி நெறி நெறியாய் வஞ்சனையற்று வளர்ந்து கிடந்தது. மேளம் தாங்கி நிற்கும் தோரணையும் துடித்து அடிக்கையில் குலுங்கும் சுருள் முடியும் வசந்தாவை பார்த்துக்கொண்டிருக்க வைத்தன. முகம் மாசு மருவற்று, பூனை மயிர் பளபளத்தத அவள் காதோரங்களில்.

அரசன் தாளங்களில் வழி தன் காதலை வாசித்துக்கொண்டிருந்தான். வசந்தா தூது போவதற்குத் தோதான ஆட்கள் தேடிக் கொண்டிருந்தாள்.

கணேசனுக்கு அரசனின் விருப்பம் தெரிந்து கட்டையர் தாத்தாவிடம் சொன்னான். நாதஸ்வரத்தை ரிப்பேர் செய்தபடி யோசனை செய்தார் கட்டையர் தாத்தா.

வசந்தாவின் வயிற்றில் கொளஞ்சி இருந்தபோது அவள் கேட்டறியாத ஊர்களுக்கு மேளம் வாசிக்கச் சென்றான் அரசன். ஒருக்களித்துப் படுத்தபடி சிம்னியின் திரியைத் தூண்டிக் கொண்டே கூரை வீடடில் காத்துக்கிடந்தாள். காகிதம் சுருட்டி அடைக்கப்பட்ட மண்ணெண்ணெய் சீசாவில் மண்ணெண்ணெய் தீர்ந்து கொண்டுவந்தது. விடிந்த பிறகு அவள் மண்ணெண்ணெய் வாங்க கடன் கேட்டுக்கொண்டிருந்தாள்.

சிறுவயசு கர்ப்பம். மெல்லிய உடலில் வயிறு தள்ளிக்கொண்டு சிரமமாக மூச்சு விட்டாள். அவளுக்கு சிரமமெல்லாம் அரசன் அருகிலிருந்தாள் பறந்து விடும். தரையில் கால் பாவாமல் பார்த்துக் கொள்வான். எல்லோரும் அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள். அவளின் ஆறுதலுக்காக அரசனைத் திட்டினார்கள். "புள்ளத்தாச்சிப் பொம்பள" என்று துணைக்குப் படுத்துக்கொண்டாள் கட்டையர் தாத்தா மனைவி. அவள் நாதஸ்வரக்காரனைக் கட்டி ஆண்டு அனுபவித்தவள். தூக்கம் வராமல் கதைகள் சொல்லிக்கொண்டு கிடந்தாள். கதைகளைக் கேட்டபடி வீடு விழித்திருந்தது. "அவனுங்களுக்கு என்ன இருக்கு சொல்லு பாப்போம்? நாலு வூட்டு சோறு. ஒரு வீட்டுத் திண்ணை" என்றாள் கிழவி.

அரசன் ஊரைத் தேடிக்கொண்டு வந்தான். குழந்தை வசந்தாவை வார்த்ததுபோல் இருந்தது. கொளஞ்சி என்று கூப்பிட்டார்கள். வசந்தாவின் தங்கை அழகம்மாள் பிரசவம் பார்க்க வந்திருந்தாள். சிறுவயதுப் பிரசவம் பிரச்சனைதான் என்றபடியே முடிந்து விட்டிருந்தது.

வேலைக்குச் செல்லாத தவில், திண்ணை மூலையில் ரோஸ் கலர் துணியால் மூடிக் கிடந்தது. அரசன் பொழுதுக்கும் புளிய மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் அசையும் பிணம் போல் வானம் வெறித்துக் கிடந்தான். கிளைகளைத் தாண்டித் தெரியும் வானம் அவனுக்கு எதையோ சொல்லிக்கொண்டிருந்தது. பாக்கு வைத்து அழைத்தார்கள் அரசனை. தவிலைத் தொடுவதில்லை என்றான். அழகம்மாள் பனைவோலைக் குடிசை முகப்பிலிருந்து அவனுக்கு பாதிமுகம் தெரிய, "வேல வித்து பார்த்தாதாங் இருக்கிறத காபந்து பண்ண முடியும்" என்றான். வந்தவர்கள் கோவில் அழைப்பிதழையும் முன் பணத்தையும் அழகம்மாளிடம் கொடுத்துச் சென்றார்கள். அழகம்மாள் முந்தியில் வாங்கிக் கொண்டாள். குழந்தையை காபந்து பண்ண வேண்டிய பொறுப்பு அவளுக்கு இருந்தது.

அரசன் வேலைக்குச் சென்றான்; மேளத்தைத் தூக்கிக் கொண்டு அழகம்மாள் பிள்ளையைப் பார்த்துக் கொண்டாள்.

சாவு வீடுகளில் அரசன் மூர்க்கமாக வாசித்துக்கொண்டிருந்தான். சாராய டப்பாக்கள் அவனிடம் திணறி விழுந்தன. போதையையும் பலத்தையும் தாளக் குச்சிகளுக்குள் செலுத்திக்கொண்டிருந்தான். கண்கள் ரத்தமாய் மின்ன மின்ன குடித்துக் குடித்து வாசித்துக்கெண்டிருந்தான். ஆட்டக்காரர்கள் சக்தியிழந்து அவன் கைகளைப் பற்றி தாளத்தை நிறுத்தினார்கள். சரஞ்சரமாய் தொங்கும் முடியினை தலை சொடுக்கி வாரிப் போட்டுக்கொண்டு சிரித்தான்

சேலத்தில் குரூப் மேளத்திற்கு நபராய் சென்ற அரசன் ராசாத்தியைக் கூட்டிக்கொண்டு வந்தான். ஊர் வேடிக்கை பார்த்தது. அழகம்மாள் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு தனிவீடு சென்று விட்டாள். அரசன் ராசாத்தியின் மழமழப்பான உடல் வளைவுகளில் இறந்து கிடந்தான். ராசாத்தி அரசனுக்குத் தலைவாரிவிட்டாள்; குளிப்பாட்டி விட்டாள்; வயல் வேலைக்குச் சென்றாள். அரசன் மேளத்தோடு காரிய வீடுகளில் வெற்றிலை குதப்பிக்கொண்டு மைனர் செயின் போட்டுக்கொண்டு களிப்பேறிக் கிடந்தான்.

மீசைக்காரன் மகன் பூபாலன் அரும்பாத மீசையைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தான். ராசாத்தியின் வாசனை ஊர் முழுக்கப் பரவிக்கொண்டிருந்தது. சுய மைதுனம் செய்ய மறைவிடம் தேடி மோட்டார் கொட்டகைக்குச் சென்றபோது ராசாத்தி ஊர்க்காரிகளோடு வயல் வேலை செய்துவிட்டு அவனைக் கடந்து சென்றாள், ராசாத்திக்காக அரசனிடம் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அழகிய மனைவி பற்றிய ஊராரின் வர்ணனைகளில் பெருமை உடலெல்லாம் சுரந்து வழிந்து கொண்டிருந்தது அவனுக்கு.

ஆண்கள் குழுமிக் கிடக்கும் இடங்களில், தெருத் திருப்பங்களில், பெட்டிக்கடைகளில், இளைஞர் சங்கத்து கொட்டகை முகப்பில் ராசாத்தி அழகைச் சிந்தி இறைத்தபடி நடந்து சென்ற கொண்டிருந்தாள். சங்கத்து சுவர்களில் ராசாத்தி பெயரை எழுதி விதவிதமாக முலை தொங்கிய படங்கள் வரைந்து அம்புக்குறி போட்டு குறியில் பெயர் எழுதி வைக்கப்பட்டது.

ராசாத்திக்கு பிள்ளைகள் எதுவும் பிறக்கவில்லை. மூத்தவள் மகள்தான் என் மகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தாள். கொளஞ்சியை வேலைக்குப் போய்விட்டு வந்தபின். தன் வீட்டிற்குத் தூக்கி வந்து பாசத்தில் உளறிக்கொண்டு கிடந்தாள். கொளஞ்சி ராசாத்தியை அடையாளம் தெரிந்து வைத்துக்கொண்டு கை கால்களை உதறிச் சிரித்தாள். குழந்தையின் சிரிப்பொலியும் உடல் தன்மையும் ராசாத்திக்குள் பரவசத்தைப் பெருக்கிக்கொண்டிருந்தது. அழகம்மாள் குழந்தையை ராயசாத்தியை நம்பி ஒப்படைத்துவிட்டுச் சென்றாள். குழந்தை ராசாத்தியிடமும் அழகம்மாளிடமும் கைமாறிக் கிடந்தது. ராசாத்தி மோட்டார் கொட்டகைக்கு மலத்துணி அலசச் சென்றாள். வசந்தாவின் பிரேம் போடாத போட்டோவை சன்னலில் சாத்திவைத்து விசேஷ காலங்களில் கறிச்சோறு படைத்தாள். பத்திப் புகை சுருள் சுருளாய் வசந்தாவின் முகத்தில் படர்ந்து கொண்டிருந்தது. குழந்தைக்கு சாமி கும்பிடக் கற்றக்கொடுத்தாள் கைபிடித்து. குழந்தை எல்லோரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

மோட்டார் கொட்டகையில் மீசைக்காரர் மகன் காதல் பாடல்களை டேப் ரிக்கார்டரில் போட்டான். ராசாத்தியின் வருகையின் போதெல்லாம் நீர் குதிக்கும் சப்தம் தாண்டி அவளுடைய காதுக்கு பாடல் போய்ச் சேரவேண்டிய கவலை அவனுக்கு இருந்தது. பாடல்களின் வழி தன் காதலை அவளிடம் சொல்லிவிட்டதாக நம்பிக்கொண்டிருந்தான். இரவெல்லாம் கண்விழித்துப் படித்த செக்ஸ் புத்தகத்தில் ராசாத்தி உருமாறி வந்துகொண்டிருந்தாள். கறுப்பு வெள்ளை படங்களில் விதவிதமாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் ராசாத்திக்கு காகிதத்தில் முத்தம் கொடுத்தான். பேப்பர் வாசனை நாசியில் ஏறியது. எரவாணத்தில் செருகப்பட்ட செக்ஸ் புத்தகம் தூங்கத் தொடங்கியவுடன் கயிற்றுக் கட்டிலில் மோட்டார் இறைக்கும் நீர் குதிப்பு சப்தங்களோடு களைத்துப்போய் தூங்கிக் கொண்டிருந்தான் ஸ்கலிதமாகும் கனவுகளுடன்.

ராசாத்தி மாதவிடாய்க் காலங்களில் அதிகாலையில் குளிக்க வந்தாள் மோட்டார் கொட்டகைக்கு விழிப்பு தட்டிய அவன் ராசாத்தியின் மினுமினுப்பான அழகு நீரில் முங்கி எழுவதைக் கண்டான். யாருமற்றதான அதிகாலைவெளி என நம்பிக்— காண்டிருந்தாள் அவள். படபடப்பு எழுந்து விடைத்துக்கொண்டு நின்றது அவனுக்கு. தன் இருப்பைக் காட்டிக்கொள்ளாமல் நின்று கொண்டிருந்தான். அவள் ஈரத் துணிகளை உடலில் போர்த்திக்கொண்டு குளிரில் நடுங்கியபடி ஓட்டமும் நடையுமாய் சென்றுவிட்டபிறகு நீரில் இறங்கி சுய மைதுனம் செய்தபடி அவள் பெயரையும் உடலையும் வருத்தி அழைத்துக் கொண்டிருந்தான். அவள் தொலைவில் சென்று கொண்டிருந்தாள். அவள் பெயரை முனகிக் கொண்டிருந்தான். தூரத்தில் சென்று கொண்டிருப்பவள் அருகாமையில் நின்றாள்; அவன் குளியலைப் பார்த்தாள்; அவளும் நீரில் இறங்கி அவனைக் கட்டிப் பிடித்து அவனைத் தனக்குள் வாங்கி அவனை ஒரு புள்ளியாக்கி பருகத் தொடங்கினாள். கண்மூடிக் கிடந்து திறந்தான். தூரத்தில் சென்ற ராசாத்தி அங்கிருந்தபடியே மோட்டார் கொட்டகையைத் திரும்பிப் பார்த்தாள். யாரோ குளிக்கும் அசைவுகள் தெரிந்து கொண்டிருந்தது தூரத்துப் பார்வைக்கு. அவள் பார்ப்பதை இவன் பார்த்தான். பிறகு அவள் செல்லத் தொடங்கினாள் பலவித யோசனைகளுடன். கொளஞ்சி வளர்ந்துகொண்டு வந்தாள். ராசாத்தி சேர்த்து வைத்த காசில் பாவாடை, சட்டை எடுத்தாள் பிள்ளைக்கு. அழகம்மாள் சைக்கிளில் வரும் துணி மூட்டைக்காரனிடம் பாதி பணமும் மீதி கடனும் சொல்லி எடுத்தாள். அரசன் பக்கத்து டவுனில் வரிசையாய் நீல மயில்கள் நிற்கும் பட்டுப் பாவாடை எடுத்துக்கொண்டு வந்தான். பட்டுப் பாவாடை கட்டிக்கொண்டு தெருப் பிள்ளைகளோடு விளையாடப் போகாமல்வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். கொளஞ்சிக்கு ராசாத்தியுடனே அதிக நேரத்தை கழிக்கும்படி ஆனது. மீசைக்காரர் வீட்டில் பிள்ளையைக் கொண்டு வரக்கூடாது வேலைக்கு என்று விட்டதில் வருந்திக்கொண்டிருந்தாள் அழகம்மாள். வேலை கெடுகிறது; இரண்டாள் சாப்பாடு ஆகிறது; நேரத்துக்கு தீனி, சாக்குப் போக்கு என்று கத்தி விட்டாள் ஆச்சி. கொளஞ்சிக்கு முக்காடு போட்டு மரத்தடியில் சோற்று வாளிகளுக்கு காவலாய் உட்கார்த்தி வைத்து விட்டு வயல் வேலை செய்துகிடந்தாள் ராசாத்தி. அழுவாத பிள்ளை என்று எல்லோரும் கிள்ளினார்கள். கொளஞ்சி சிணுங்கிவிட்டு வாயை மூடிக்கொண்டாள். ராசாத்தியின் பேச்சுவழக்கும் காரிய நேர்த்தியும் மணம் கமழும் சமையலும் பின்னாளில் கொளஞ்சிக்கு ஒட்டிக் கொண்டது.

தன் எண்ணங்களை ராசாத்தியிடம் நேரடியாகச் சொல்லாமல் பல வழிகளில் தெரிவித்துக்கொண்டிருந்தான் மீசைக்காரர் மகன், அரசன் வசிக்கும் தெருவில் அவன் பாதம் நடந்து நடந்து தேய்ந்து கொண்டிருந்தது. கிழவிகள் அவனைக் கூப்பிட்டு அவன் அப்பாவை விசாரித்தார்கள். ராசாத்திக்கு அவன் வருகை தெரிந்துகொண்டு வந்தது. ராசாத்திக்கு தூரத்திலிருந்து மோட்டார் கொட்டகையின் காட்சிவெளியைப் பார்க்கும்போதெல்லாம் யாருமற்ற காலையில் நீராடியதும் வந்து விட்ட பின் எதேச்சையாய் திரும்பிப் பார்த்த கணத்தில் அங்கு வேறு யாரோ ஒரு உருவத்தின் குளியல் அசைவையும் நின்று உற்றுப் பார்த்தது அவளுக்கு நிழலாடிக்கொண்டிருந்தது. அந்நினைவு அவள் வாழ்க்கையில் மறக்க முடியாத அரூப நினைவாக விழுந்துவிட்டிருந்தது. அந்த மாதத்து மாதவிடாய் காலங்களில் அவளிடம் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்ததை முகம் பார்க்கும் கண்ணாடியில் கண்டு கொண்டிருந்தாள். தேவையற்ற பரபரப்பும் துயரம் படிந்த முகமும் மறைமுகமான சத்தோஷமும் அதிகாலையில் தோன்றி மறைந்து கொண்டிருந்தது.

பறவைகளின் சப்தத்துடனும் மோட்டாரின் தொடர் ரீங்காரத்துடனும் நீராடிக் கொண்டிருந்தவளுக்கு கீற்று மறைவில் நிற்கும் இரண்டு கால்களை மட்டுமே அவதானிக்க முடிந்தது. அவள் இயல்பாய் எழுந்து ஆடை மாற்றும் போக்குகாட்டி கொட்டகைப் பின்புறமாக சுற்றிவந்து உள்ளே எட்டிப் பார்த்தபோது அவள் குளியல் முடித்து விட்டதான எண்ணத்திலும் அவசரத்திலுமான முடியாக் கனவின் துயரத்துடன் சுய மைதுனத்தில் மிதந்து கொண்டிருந்தான். அதை எதிர்பார்த்தவள் அவன் தன்னைப் பார்க்கும்வரை நின்று கொண்டிருந்தாள்.

அதன் பிறகு அவனைக் கடந்து சென்ற போதெல்லாம் அவள் முகத்தில் விசேஷ பூ சிரித்துக்கொண்டிருந்தது. பேன் பார்க்கும் கிழவிகளை வீட்டு வாசலில் இருந்து கொண்டு தலை மயிரைப் பரப்பிவிட்டு சாடைமாடைப் பேச்சுக்கள் மொழிந்துகொண்டிருந்தாள். எதிர் திண்ணைகளில் பேச்சுக் கொடுத்துக் கிடத்தான் அவன். வயசாளிகளும் குழந்தைகளும் அவனின் அர்த்தமற்ற பேச்சுக்களுக்கு செவிமடுத்துக் கிடந்தார்கள்.

முகம் தெரியாத அதிகாலை இருட்டில் பாவாடை, சேலைகளைத் தோளில் போட்டுக்கொண்டு குளிக்கச் சென்றாள். அவளின் வருகை அவனுக்கு யாருமே சொல்லாமலே தெரிந்திருந்தது. அவனின் ஒவ்வொரு அசைவுகளையும் கற்பனையில் நினைத்தபடி வரப்பில் நடந்துகொண்டிருந்தாள்.

மீசைக்காரர் வீட்டின் பயனற்ற பழைய பொருள்கள் குவிக்கப் பட்டிருக்கும் தனி வீட்டில் உடலின் மர்மங்களோடு அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சாகக்கிடக்கும் மீசைக்காரர் வீட்டுக் கிழவி அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள் சாம்பல் நிறக் கண்களுடன். அவர்களின் இருப்பு தனக்குத் தெரியும் என்பதை எத்தனையோ முறை அவளின் மட்கிய குரலில் இருமியும் கனைத்தும் காட்டியும் அவர்கள் பொருட்படுத்தாதிருந்தார்கள். தன்னைப் பொருட்படுத்தாத அவர்கள் தன்னை அவமானப்படுத்துவதாகக் கருதி சபித்தாள். மரணத்தின் முனகலும் சுகிப்பின் சிரிப்பும் ஒரே அரையில் ஒலித்துக்கொண்டிருந்தது.

கிழவியின் மல மூத்திரங்களை சுத்தப்படுத்த வந்த அழகம்மாள் அவர்கள் கட்டிப் பிடித்துத் துயில்வதைப் பார்த்துவிட்டுச் சென்றாள். அரசன் விசனம் பிடித்துக் கிடந்தான்.

பிரசிடென்ட் வீட்டு மாட்டுக் கொட்டகையில் பஞ்சாயத்து நிகழ்ந்தது. அரசன் கைகளைக் கட்டிக்கொண்டு கல்தூணில் சாய்ந்து நின்றான். ராசாத்தி எல்லோருக்கும் மறைவாய் விசும்பிக்கொண்டு நின்றாள் மாடுகளின் பின்புறம். அரசனை சமாதானப் படுத்தினார்கள். அரசன் அவளை வச்சி வாழமுடியாதென்றான்.

"பையன் சின்ன பையன்" , "யாருதாங் தவறல்", "இந்த ஒருவாட்டி விட்டுப்புடி", "கழுத மேயுதுன்னா தொலைச்சி தலமொழுவிட்டுப் போ", "அதுக்கப்பறம் நான் இவள உங்கிட்ட சேத்தன்னா உஞ்செருப்பகயிட்டிக்க ஆமா".

"உங்க வீட்ல உங்க சம்சாரம் இப்பிடி பண்ணிட்டா இப்படி பேசுவீங்களா?"

பிரசிடென்ட் துண்டை உதறி தோளில் போட்டுச் சென்றார். சாயங்காலம் தீர்ந்துபோனது. எல்லோரும் வீட்டுக்குச் சென்றும் ராசாத்தி பிரசிடென்ட் வீட்டில் அவர் மனைவியிடம் அழுது புலம்பிக்கொண்டிருந்தாள்.

அன்றிரவு வாழ்க்கை பூதாகரமாக மீசைக்காரர் மகனிடம் பற்களைக் காட்டிக்கொண்டு நின்றது. ராசாத்தி அவன் முன் முகம் மூடி அழுதுகொண்டிருந்தாள். விடியும் வரை விரைத்த சடலம் போல் யோசனை செய்துகொண்டிருந்தான்.

மாட்டுச் சந்தையின் பின்புறம் மாற்றுத் துணிகளும் செருவாட்டுக் காசும் எடுத்துவந்து காத்திருந்த பகல்பொழுது முடிந்து போனது ராசாத்திக்கு. போக்கிடமற்ற கவலை பீடித்து உதடுகள் உலரத் தொடங்கி எச்சில் சுரப்பு நின்றுபோனது. வந்து சேராத அவன் வருகையை அழுது தீர்த்துக் கொண்டிருந்தாள்.

அழகம்மாளின் தனி வீட்டில் பழம்புடவையில் அவள் உடல் சமனப்படாத விசையுடன் இடமும் வலமுமாய் ஆடிக் கொண்டிருந்ததை கொளஞ்சிதான் முதலில் பார்த்தாள்.

கொளஞ்சி மாராப்பு போட்டுக் கொண்டாள். அரசன் பிழைப்பு தேடி அயலூர்களுக்கு சென்று கொண்டிருந்தான். தூரத்து ஊரில் பூபாலன் காலேஜ் படிப்பை தங்கிப் படித்தான். அழகம்மாள் கருவாடு போல்ஆகிக் கொண்டு வந்தாள். அவளின் சருமம் மேலும் மேலும் வரிவரியாய் கிழடுதட்டிப் போனது. ஊரறிய அரசனுக்குப் பெயர் சொல்லாத பெண்டாட்டியாக வந்து சேர்ந்தவளுக்கு கல்யாணத்தில் இஷ்டமில்லாமலில்லை. எடுத்து செய்வார் யாருமில்லை. அவள் உடல் மன இறுக்கங்களால் கெட்டித் தட்டி நரம்பாகிப் போனாள். மேலுக்கு ஒரு புடவையைச் சுற்றிக்கொண்டும் அவளின் பழைய அளவைச் சொல்லும் தொளதொள ஜாக்கெட்டைப் போட்டுக் கொண்டும் அடிமை வேலை செய்யச் சென்றாள். வேலைகள் ஆவலாய் அவளைப் பற்றிக்கொண்டு இழுத்தன. சதா சுரந்துகொண்டிருக்கும் முதலாளி வீட்டு வேலைகளின் அன்றைய வேலைக்கான முடிவை இரவுகள் வந்து முற்றுப்புள்ளி இட்டு வைத்தன. கொளஞ்சி சோறாக்கி வைத்துவிட்டு பக்கத்து வீடுகளில் உட்கார்ந்து அழகம்மாளின் வருகைக்குக் காத்திருந்தாள். ராசாத்தியின் உடல் தொங்கிய அக்காட்சி, தனிமையான இரவுகளில் கொளஞ்சிக்கு பயமூட்டுவதாக சொல்லிக் கொண்டு நேரத்தில் வீடுவரும்படி அழகம்மாளை நச்சரித்துக் கொண்டிருந்தாள். வயிசுக்கு வந்த பிள்ளையை காத்து கறுப்பு அண்டினால் ஆயுசுக்கும் போகாது என்று வேறு வீடு பார்க்கச் சொன்னார்கள். அழகம்மாளுக்கும் இரவில் துர்சொப்பனங்கள் வந்து கொண்டிருந்தது. அம்மா இருக்கும் தைரியத்தில் பிள்ளையும் பிள்ளை இருக்கும் தைரியத்தில் அம்மாவும் அவ்வீட்டில் விடிய விடிய விளக்கெரியவிட்டு உறங்கிக் கொண்ருந்தார்கள்.

அழகம்மாளுக்கு டைபாய்டு ஜூரம் வந்து முனகிக் கொண்டு கிடந்தாள். முதலாளி வீட்டு வேலைகள் அவளைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தது. அம்மாவுக்கு பதிலாய் ஈரிழைத் துண்டை கழுத்தில் சுற்றிக் கொண்டு முதலாளி வீட்டுக்கு வேலைக்குச் சென்றாள். புதிய வேலைக்காரியின் சுறுசுறுப்பும் காரியநேர்த்தியும் ஆச்சிக்கு மிகவும் பிடித்து பழம் புடவைகள் மூன்று கொடுத்தாள். சென்ற விசேஷங்களில் செய்து இன்னும் தின்று தீராத பட்சணங்களை பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு சவ்வுத்தாள் பையில் போட்டு வாரிக் கொடுத்தாள். ஜூரத்தில் முனகிக்கெண்டிருக்கும் அழகம்மாளுக்கு நாக்கு கசந்து போனது. பட்சணங்களை அவளால் ருசி பார்க்க முடியவில்லை. கடைசி காலங்களில் கொளஞ்சி தனக்கு கஞ்சி ஊற்றி காபந்து பண்ணுவாள் என்று ஊர்ஜிதமாகிக் கிடந்தாள். அம்மாவுக்கு உடல் சரியாகும் வரை என்று நினைத்துக்கொண்டு வேலைக்குச் சென்றதைத் தாண்டி ஆத்தாளும் பிள்ளையுமாக ஜோடி போட்டுக்கொண்டு வேலைக்குச் சென்றார்கள். ஆச்சிக்கு நிம்மதியாக இருந்தது. சிறிது காலத்தில் கொளஞ்சி மட்டும் போதும் என்றாள். அழகம்மாள் எப்போதாவது கிடைக்கும் விவசாய வேலையைப் பார்த்துக்கொண்டும் பிள்ளைக்கும் தனக்குமாய் சோறாக்கி வைத்துக் கொண்டும் தனிமையும் பயமும் ஒழுகும் கூரைவீட்டில் காத்துக் கிடந்தாள்.

கொளஞ்சிக்கு முதலாளி வீட்டின் ஒவ்வொரு அசைவும் தன் நடத்தைகளுக்குள் வந்தபோது பூபாலன் படிப்பு முடித்து வீடு வந்தான். எந்த வகையிலும் அழகாய் தெரியாத அவளிடம் மயங்கி நின்றான். அவள் உடலைத் தாண்டி ஏதோ ஒரு மாய வசீகரத்தில் போதை வயப்பட்டவனாக நின்றுகொண்டிருந்தான். ஏரிக்கரை வயலில் வேலை செய்யும் ஆட்களுக்கு அன்னக் கூடையில் சோறு வளர்த்துக் கொண்டும் குழம்பு வாளியைத் தூக்கிக் கொண்டும் வெயிலில் சென்றாள். பூபாலன் அவளுக்கு ஒத்தாசையாய் குழம்பு வாளியை சைக்கிள் ஓட்டியபடி வாங்கிச் சென்றான். நாவல்பழ மரத்தடியில் வேலை செய்த ஆட்களுக்கு வயிறார சப்பாடு போட்டாள். ஈரம் தீராத உதடுகளில் நாவல் பழங்களை சப்பித் தின்றாள். உதடுகளும் உதடுகளின் சுற்றுப்புறங்களும் ரோஸ்கலர் படிந்திருக்க வீடு வந்த போது, பூபாலன் அவள் நாவல்பழம் தின்ற வக்கணையை கேலி செய்து சிரித்தான். முதலாளி மகனின் கேலி வெட்கத்தை மீறி சங்கடத்தைத் தருவித்தது. ஓடி ஒளிந்துகொண்டாள். அவனுக்காக ஓடியதும் ஒளிந்ததும் இருவருக்குமான சுவாரஸ்யமான காரியமாக இருந்தது. அவள் ஓடி ஓடி ஒளிவதற்கான செயல்களையும் பேச்சுக்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தான். அவன் குரலைக் கேட்காமல் அவளுக்கு அவ்வீட்டின் இருப்பு நிலைக்கவில்லை. அவளின் அசைவுகள் இல்லாத அவ்விட்டின் இரவுப் பொழுதுகளை, பகலில் நிகழ்ந்தவைகளை நினைத்துக் கழித்தான். பகல்கள் மிகச் சிறியதாகவும் இரவுகள் மிக நீண்டதாகவும் போய்க்கொண்டிருந்தது. கொளஞ்சி பிள்ளைமார் தெருவில் மோர் விற்கச் சென்றபோது நாய்கடித்து குருவிக்கார தாத்தாவிடம் விபூதி வைத்தியம் செய்துகொண்டு வேலைக்கு வராமல் அழகம்மாளை அனுப்பி வைத்தாள். அழகம்மாள் மாலை மாலையாய் அழுதாள் ஆச்சியிடம். பூபாலன் அவளைத் தேடிக்கொண்டு அவள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது. சாணி மெழுகிய தரையில் சாக்கு விரித்துப் படுத்துக் கிடந்தாள். டாக்டரிடம் செல்ல பணம் கொடுத்தான். அவளை பஸ்ஸில் வரச் சொல்லி டாக்டர் வசிக்கும் தெருவில் சைக்கிளில் காத்திருந்தான். கடைத் தெருவில் இருவரும் பேசிக்கொண்டு சென்றார்கள். நீ இல்லையென்றால் செத்துப் போய்விடுவேன் என்றான். அவனுக்காக, அவ்வார்த்தைகளுக்காக அழத் தொடங்கினாள்.

இருவரும் சேர்ந்து பிடித்துக்கொண்ட போட்டோவை கொளஞ்சி அடுக்குப்பானையில் ஒளித்து வைத்தாள். பழந்துணி சுருட்டி. கொளஞ்சி இருளில் அரட்டிக்கொண்டு கிடந்தாள். அழகம்மாளுக்கு பயம் பற்றிக்கொண்டு பக்கத்து வீடுகளை துணைக்கு அழைத்தாள் அவர்கள் தூக்கம்போன கண்களுடன் குருவிக்கார தாத்தாவைக் கூட்டி வந்தார்கள். பிள்ளை தலை மயிரைப் பரப்பிப் போட்டுக் கொண்டு பற்களை நறநறவெனக் கடித்தாள். குருவிக்கார தாத்தா பிள்ளையை ஆதுரமாகத் தழுவித் தூக்கினார். அது அவர் மேல் காறித்துப்பியது. மயிரைக் கொத்தாக பிடித்து தூக்கி அறைந்தார். பிள்ளை சுருண்டு விழுந்தாள். கொளஞ்சியின் மேலெல்லாம் திருநீற்று சாம்பல் பூசிவிட்டு அருகிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அழகம்மாள்.

தடிமனான இரவுகள் அவளை மூச்சுத் திணற வைத்தது. தெருவில் ஆடைகளைக் களைந்து ஓலமிட்டபடி கத்திக்கொண்டு ஓடினாள் கொளஞ்சி. பிரம்படியும் நெருப்புச் சூடும் தடம்பதித்துக் கிடந்தது அவளுடலில். பகல் முழுக்க திராணியின்றி சுருண்டு கிடந்த பிள்ளையை வெந்நீர் வைத்துக் குளிப்பாட்டினாள் அழகம்மாள். சடை பின்னிப் பூ வைத்து ஆடை மாற்றி மடியில் கிடத்தி கொண்டு அழத் தொடங்கினாள். கொளஞ்சியும் சேர்ந்துகொண்டு அழுதாள்.

பூபாலனுக்கு மீசைக்காரர் கல்யாணப் பேச்சைத் துவங்கத் தொடங்கியதுமே கொளஞ்சியைக் கட்டிக்கொள்ளப் போவதாகச் சொன்னான். கொளஞ்சியைக் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டுச் சென்றான் பூபாலன். அழகம்மாள் அவனுக்கு கும்பிடு போட்டு அழுதாள். அவன் சென்ற பிறகு ஊதாங்குழலை அடுப்பில் சூடேற்றி கொளஞ்சியை மிரட்டினாள். கொளஞ்சி அடுப்பங்கரையில் ஆட்காட்டி விரலில் ரத்தமெடுத்து கொளஞ்சி - பூபாலன் என தரையில் எழுதியதை சாணியால் மெழுகி அழகம்மாளால் மறைத்துவிட முடியவில்லை

ஆச்சியின் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு வந்து விருந்துண்டு சென்றார்கள். வந்தவர்களுக்கு விதவிதமாக ஆக்கிப்போட்டு மகிழ்ச்சியூட்டினாள் ஆச்சி. பூபாலனிடம் எல்லோரும் வேலைக்கார பறைச்சியை எப்படி மருமகளாக்குவது என்று கேட்டுவிட்டுச் சென்றார்கள். மீசைக்காரர் காரெடுத்துச் சென்று காரிய வேலைகள் பார்த்துக் கொண்டிருந்தார். பூபாலன் இன்னும் படிக்க வேண்டும் என்றான். " கட்டிக் கொண்டு படி "என்றார்கள். பார்த்திருக்கும் பெண் பாரம்பரியமிக்க வீட்டின் குணவதி என்று பார்ப்போரிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆச்சி.

கரும்புக் கொல்லையில் வெய்யில் மிதக்கும் வேளையில் இரண்டு கலர் பாட்டில்களை எடுத்து வைத்தான் கொளஞ்சியிடம். முகம் இறுகி கட்டிக் கொண்டாள் அவனை. இரண்டு பாட்டில்கள் காத்திருக்க இருவரும் புணர்ந்து களைத்தார்கள். இருவரும் கையிலெடுத்துக் கொண்ட பாட்டில்களை வைத்துக்கொண்டு ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொண்டார்கள். அவள் பார்த்துக்கொண்டிருக்க, அவன் குடிக்கத் தொடங்கினான். அவள் அவன் குடிப்பதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் ஒரே மூச்சில் குடித்துவிட்டு அவளைப் பார்த்தான். நொடிகளில் வேற்றுமையில் அவன் மரணத்தை சம்பவிக்கப் போகிறவனாக அவளிடமிருந்து மாறுபட்டுப் போனான். பாட்டிலை வைத்துவிட்டு அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள். அவன் அவளைக் குடிக்கச் சொன்னான். அவள் அவனுக்குமேலும் மேலும் முத்தங்களைக் கொடுத்தாள். சட்டென்று கோணிக்கொண்ட அவன் உடல் வலிப்பு போல் இழுக்கத் தொடங்கியதை விலகி நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள், உலர்ந்து போய். சிறிது நேரத்தில், சுடப்பட்ட ஒரு மூர்க்கமான விலங்குபோல் அலங்கோலமாய் கோணிக்கொண்டு கிடந்தான். மிச்சமிருந்த ஒரு பாட்டிலை எடுத்துக்கொண்டு வெளியே ஓடத் தொடங்கினாள் பயத்துடன். சிறிது நேரத்தில் அவன் உடலில் ஈ மொய்க்கத் தொடங்கியது.

எழுதியவர் : கணேஷ் கா (23-Jan-14, 9:10 am)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 302

மேலே