என்னை நானே தேடுகிறேன்

என்னை நானே தேடுகிறேன்
எங்கோ என்னை தொலைத்து விட்டேன்
சோர்ந்து போய் நானும் அமர்ந்தேன்
எங்கே சென்றேன் தெரியவில்லை.

உங்களில் எவரும் என்னைப் பார்த்தால்
என்னிடம் வந்து சொல்லுங்கள்
என்னை நானே பத்திரமாய்
இனி பார்த்துக் கொள்வேன் இது உறுதி.

இதைப் படிக்கும் நீங்கள் குழம்பாதீர்
உங்கள் கேள்விக்கு விடை உண்டு
“என்னை” என்று நான் சொல்வது
என் இதயம் தான் அதை மறவாதீர்.

என் அறிவும் மனமும் ஒன்று சேர்வது
என் இதயத்தின் அனுமதியை பொருத்தது
இந்த மூன்றின் இயக்கம் என்பது
என்றும் என்னை முழுமையாய் ஆக்குவது.

என் இதயமும் நானும் அவ்வப்பொழுது
சிறு சிறு மனஸ்தாபம் கொள்வதுண்டு
என்னிடம் கூடச் சொல்லாமல் அது
கோபித்துக் கொண்டு செல்வதுமுண்டு.

அதுவே திரும்பி வரட்டும் என்று
நானும் அமைதியாய் இருப்பதுமுண்டு
சிறுது கால நேரம் கடந்த பின்னாலே
நாங்கள் பரஸ்பரம் சேருவதுமுண்டு.

இன்று கோபித்துக் கொண்டு சென்ற இதயம்
இதுவரை என்னிடம் வந்து சேரவில்லை
அது எங்கு சென்று இருக்கும் தெரியவில்லை
அதனால் தான் உங்கள் தயவை நாடுகிறேன்.

என் அருமை தோழர்,தோழிகளே
உடன் இருக்கும் உறவுகளே
உங்களிடம் அது வந்திருந்தால்
நல்ல புத்தி சொல்லி அனுப்புங்கள்.

உதவி என்று யார் கேட்டாலும்
உடனே வருவது நட்பும், உறவும்
இந்த இக்கட்டான சூழ்நிலையில்
நீங்கள் வருவீர் என்று நம்புகிறேன்

என் இதயம் செல்லும் இடம் அனைத்தும்
உங்கள் இருவருக்கும் தெரியும் தான்
துரித கதியில் நீங்கள் செயல் பட்டு
எங்கள் இருவரையும் ஒன்றாய் சேர்த்திடுங்கள்

அது இல்லாமல் அதிக நேரம்
நானும் இருக்க முடியாது
என் சிந்தனை திறனும் இயங்காது
ஆதலால் சற்றே உதவுங்கள்.

என் விலாசம் உங்களுக்கு தெரியும்
என்னை கூப்பிடுவதோ ரொம்ப சுலபம்
உங்கள் அழைப்புக்காக காத்திருக்கும்
உங்களைப் போல் ஒரு மனிதன் நான்

என்னை நானே தேடுகிறேன்
எங்கோ என்னை தொலைத்து விட்டேன்
சோர்ந்து போய் நானும் அமர்ந்தேன்
எங்கே சென்றேன் தெரியவில்லை.

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (6-Feb-14, 7:21 am)
பார்வை : 280

மேலே