கரிசல் மண்ணில் ஒரு காவியம்—1௦

கரிசல் மண்ணில் ஒரு காவியம் 1௦
அத்தியாயம் 1௦
ராசாவின் தாயார்: ஒரு உறவு தொலைந்தால் அது மீண்டும் கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை என்ற உண்மையை அவள் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தாள்.அக்கம் பக்கம் உறவுகள் அவசியம் என்பதையும் புரிந்து வைத்திருந்தாள்.நேற்றுவரை தாயாய்ப் பிள்ளையாய் பழகிவிட்டு இன்று ஒருவற்கு ஒருவர் பகையாளிகளாய் ஒருவர் முகம் ஒருவர் பார்க்கக் கூச்சப்படும் நிலை எவ்வளவு மோசமானது.அதனால் மனதுக்குள் ஏற்படும் வலி என்ன என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள்.
இப்படியொரு நேரக்கூடாத நிகழ்வு எப்படி நேர்ந்தது என்பதற்கான காரணம் தேட ஆரம்பித்தாள்.மகனைப் பார்க்கிறாள்.அவனும் ஒரு பக்கம் வாடி வதங்கி இழக்கக்கூடாத ஒன்றை இழந்துவிட்டதுபோல் இடிந்து போய் சோகமே சொந்தமென உட்கார்ந்திருந்தான்.மெதுவாகத் தாய் அவன் பக்கம் நகர்கிறாள்.அவனுடைய சோர்ந்து போன முகத்தைப் பார்க்கிறாள்.தாயின் பார்வை அவனுக்குப் புரிகிறது,அம்மாவைப்போலவே அவனும்தான் உணர்ந்துகொள்ள அவனுடைய கண்கள் அவளிடம் விடை தேடி அழுகிறது.
அப்படியே அவனைப் பெற்றவள் அவனுக்கு ஆறுதலாக அவனை தன் மார்போடு அள்ளி அணைத்துக்கொண்டு நடந்தது என்ன என்பதை விசாரிக்கத் தொடங்குகிறாள்
“ டேய் ராசாக்கண்ணு என்னடா இதெல்லாம் ஏண்டா இப்படி.அவர்கள் மிகவும் நல்லவர்கள்தானே!இவ்வளவு கோபம் வரும்படி என்னடா நடந்தது.இதற்குமுன் அவர்கள் யாரும் இப்படி நடந்து கொண்டது இல்லையடா .அவர்கள் நம்மை விட உசந்தவர்கள்தான்.ஆனாலும் அவர்கள் அதைக் காட்டிகொண்டது இல்லையடா.அவர்களுக்கும் நமக்கும் பகை ஏற்பட வேறு எந்தக் காரணமும் இல்லையடா.சொந்தக்காரங்க கூட நம்மீது அவர்களைப்போல் உதவியாகவும் துணையாகவும் இருந்தது இல்லையடா.இவ்வளவு பிரச்சனை ஏற்பட என்னடா ஆச்சு?ஏண்டா இப்படி?நீ ஏதாவது தப்பா நடந்துக்கிட்டியாயா?சொல்லுயா!” எனக் கவலை தோய்ந்த குரலில் கண்ணீர் மல்கக் கேட்டாள்,இதைக் கேட்ட ராசா என்ன பதில் சொல்வான் பாவம்!அவன் தன் தாயைக்கட்டி அணைதுக்கொண்டுக் கதறினான்.”அம்மா!நான் எந்தத் தப்பும் செய்யலியே!அந்த ஆச்சிதான் முன்னைப்போல இல்லம்மா!இப்பொழுதெல்லாம் அந்த ஆச்சி என்னை வீட்டிற்குள்ளேயே சேர்ப்பதில்லை.என்னை ஏதோ ஒரு வேண்டாதவனைப்போல் வெறுக்கிறாள்.அது ஏன்னுதான் எனக்குப் புரியலம்மா!”என உலகம் புரியாதவனாய்ப் பதிலுரைத்தான்.
“டேய் கண்ணா நாந்தாங் அன்னிக்கே சொன்னேல்ல.கமலா வயசுக்கு வந்துட்டா.இனிமே அவங்க வீட்டுக்கு முன்ன மாதிரி அடிக்கடி போகக்கூடாது அப்படின்னு சொன்னேல்ல.அப்புறம் ஏண்டா நீ அங்க போன .அப்பத் தப்பு உம்மேலத்தான்.அதான் ஆச்சிக்கு வேற வழி தெரியாம சண்ட இழுத்துருக்கா.ஏண்டா இப்படிப்பண்ணுன.டேய் யாரைப் பகைச்சிக்கிட்டாலும் பக்கத்து வீட்டுக்காரங்களப் பகைக்கக் கூடாதுடா!அப்படிப் பகைச்சிக்கிட்டா அப்புறம் கால் பட்டாலும் குத்தம் கை பட்டாலும் குத்தமுன்னு எதுக்கெடுத்தாலும் சண்ட வந்துக்கிட்டே இருக்கும்டா!அம்மா சொன்னாப் புரிஞ்சுக்குனுமுடா!இப்பப் பாத்தியா எவ்வளவு பெரிய சண்ட.நீ அவ்வளவு பெரிய கல்லத் தூக்கிப்போட்டியே அது அந்த ஆச்சி மேல விழுந்திருந்தா பாவம் அந்தக் கிழவி செத்துருக்கும்மடா! அந்தக் கிழவிக்கு ஏதாவது ஒண்ணு ஆயிருந்தா அப்புறம் ஒங்கதி என்னடா!கொஞ்சமாச்சும் நீ யோசிசசுப்பாத்தியா!முட்டாப்பயல நீ படிச்சவன்தான இப்படிபண்ணலாமா?இதுக்குத்தானா நாங் இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வக்கிறேன்.”என ஆழ்ந்த கவலையோடு அழுத கண்ணீரோடு ஆதங்கச்சொற்களை உதிர்த்தாள்
அந்த ஆச்சி மட்டும் அப்படிப் பேசலாமா?உன்னயப்பத்த்தித் தப்புத் தப்பா அவ பேசினா என்னால பொறுத்துக்க முடியுமா?அதாங் எனக்குக் கோவம் வந்துருச்சு.ஆத்திரம் தாங்கல.அவசரப்பட்டுட்டெங்.அப்பக்கூட அந்தக் கல்ல அவ மேல போடணுமுன்னு போடல.கல்ல எடுக்கும்போது வேகமாதாங் எடுத்த்தேங் ஆனா போடணுமுன்னு நினைக்கும்போது பயம் வந்துருச்சு.எடுத்த கல்ல எப்படியும் கீழ போட்டுத்தான ஆகணும் போட்டுட்டேங்.கீழ விழுந்த கல்லு எப்படியோ உருண்டு கிழவி காலுல பட்ட்ருச்சு..நாங் போடணுமுன்னு நினைச்சுப் போட்டிருந்தா அந்தக் கிழவி அப்பவே செத்துப் பொணமா ஆயிருக்காது.என குழந்தைத்தனமான பதிலை சொன்னான்.
“வாய மூடுறா மடயா!செய்யுறதையும் செஞ்சுப்புட்டு வியாக்யாணாமா பேசுற வியாக்யானம்.இன்னிக்கு இவ்வளவு தூரம் ஆயிப்போச்சே இன்னும் எப்படிறா அவங்க கூட முகம் குடுத்துப் பேசுறது.டேய் நாங் ஒண்ணு கேக்குரேங் நீ மறைக்காம சொல்லணும்.அந்தப் புள்ளயிட்டப் போயி அது இதுண்ணு ஏதாவது தப்புத்தண்டாப் பேசினயா?சொல்லுடா!”என நளினமாக விசாரிக்கத் தொடங்கினாள்.
“ஏம்மா அவட்ட இன்னிக்குன்னு நாங் புதுசாவா பேசுறேங்.நாங்க சின்னப்புள்ளையில இருந்தே அப்படிதானம்மா பழகுறோம்.இப்பமட்டும் அது ஏங் தப்பாப்போச்சு.?என விவரம் புரியாமல் கேட்டான்.
“அய்யோ உனக்கு எப்படிச்சொல்லிப் புரிய வக்கிறதுன்னு தெரியலயே!இப்படி வாழ மட்டையா இருக்கயே!டேய் அவ அப்போ சின்னப்பொண்ணு இப்ப அவ பெரிய மனிசி ஆயிட்டா அதனால ஆம்பளப் பயக கூட அவ பேசக்கூடாது.அப்படி பேசினா அது தப்பு.அவளஒரு மாப்பள பாத்துக் கட்டிக் குடுக்குற வரைக்கும் அப்படித்தாங் அவள பாதுகாப்பா வச்சுருப்பாங்க புரிஞ்சுக்கோடா.””எனப் புத்திமதி சொன்னாள்
போம்மா அவளுக்கும் எனக்கும் ஒரே வயசுதான அப்புறம் அவ மட்டும் என்னயவிட எப்படிப் பெரிய மனிசியா ஆயிட்டா?.”என விளங்கிக்கொள்ள முடியாத வயதில் விவரம் இல்லாமல் கேட்டான்.
“அடப்பாவிப் பயலே!சரி!நீ ஆச்சி மேல எதுக்குக் கல்லத்தூக்கிபோட்ட!”
“அவ உன்னத் தப்புத் தப்பாப் பேசினா அதாங் போட்டேங்”
“அது மட்டும் தப்புண்ணு தெரியுதுல்ல`இதும் அப்படிதாண்டா தப்பு.நீ கமலாவோட பேசிப் பழகிக்கிட்டு இருந்தா நாளைக்கு அவளயும் இப்படித் தப்பாத்தாண்டா பேசும் இந்த ஊரு என விளக்கம் கூறிக்கொண்டே கதறினாள் அந்த உலகம் அறிந்த தாய்.
(தொடரும்)


கொ.பெ.பி.அய்யா

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (11-Feb-14, 1:24 am)
பார்வை : 384

மேலே