காக்காய் கடி

காக்காய் கடி

அப்பாக்கு பயந்து
பள்ளிக்கு போனேனே
அழுது வடிஞ்சு
வீட்டுக்கும் வந்தேனே
மொதோ நாளு
பள்ளிய பார்த்து பயந்தேனே

பக்கத்தில் உக்காந்த
நண்பன் முகம் மறந்திடுமா ?
கண்ணாடி பாக்கையில
தழும்பா தான் சிரிகிறானே ....

ராகமா வணக்கம் பாடயில
ஒரு வணக்கம்
அபஸ்வரமா வந்திடுமே

ஓடிபிடிச்சு விளையாட
கும்பலதான் போயிடுவோம்
ஒளிஞ்சு பிடிச்சு விளையாடையில
வீட்டு பாதை மறந்தேனே
ஊரும் தேடி தான்
என்னை பிடிக்கையில
அம்மா அடிச்சாலே
அழுதபடி அனைசாலே

எச்சி துப்பி தான்
சிலேட்ட துடைக்கையிலும்
வரிசையா கூடி நின்னு
முச்சா தான் போகையிலும்
மறந்து தான் போனதையா
வாத்தியார் சொன்ன சுகாதாரம்

ஆத்துல எறங்கி
அலப்பரை செய்யயில
ஆத்து மீனுக்கும்
காய்ச்சல் வந்திடுமே

எங்க காயெல்லாம்
உடனே பழுத்திடுமே
பழமா தான்
நாங்க போடும் சண்டையில

எட்டணாக்கு மாங்கா வாங்கி
எட்டு கடி கடிக்கையில
சட்டையில முடி தான்
காக்காய் கடி கடிச்சேனே
கைநிட்டும் நண்பனுக்கு

வீட்டு பாடம்
எழுத சொல்லி விரட்டயில
ஒளியும்ஒலியும் பாக்க தான்
ஒப்பாரி வச்சேனே

மாஞ்ச கயித்தல
பறந்த பட்டம் அறுத்தேனே
கில்லியும் பறந்ததையா
ஜன்னல் கண்ணாடி உடஞ்சதையா

நான் பார்த்த உலகத்த
என் பிள்ளை
பாக்கலியே
குரங்கும் துரத்தா
டெம்பிள் ரன்னில் ஓடுறானே

பிள்ளை கடிச்ச
மாங்காய பாக்கையில
என் நாக்கும் உறுதையா
பழைய காக்கா கடி நினைச்சுதான் ...........

பாண்டிய இளவல் (மது)

எழுதியவர் : பாண்டிய இளவல் (மது) (21-Feb-14, 12:07 pm)
பார்வை : 116

மேலே