நட்சத்திரத் தூவல் டைரி 2004

நட்சத்திரத் தூவல் (டைரி 2004)
================================

சருகுகள் விழுந்தும்
சலனமற்றிருந்தது நதியின் விளிம்பு

குழப்பத்துடன்
துலக்கிக்கொண்டிருந்தன
வனாந்திர பட்சிகள்
நீரில் தமது நிழலாடல்களை

ஆழ்ந்த பிரார்த்தனைக்குப்பின்னால்
எத்தனை முயன்றும்
அழிக்கமுடியாமல் தோற்றுப்போயின
பெரும்பெயல்கள்
வனதேவதைகளில் உறைந்த
விபூதிகுங்குமக் கறைகளை

சுவர்களில் ஈரம் மேலேற மேலேற
பல்லிகள் சத்தமிடுகின்றன
புரியவாப்போகிறது ,,புயலுக்கு சகுனங்கள்

கூடுதலின் நீட்சியால்
சேவேரிய மன அழுக்குகளை
நிச்சலன மதகு
வெளியேற்றிக் கொண்டிருந்தது
தனிமை சஞ்சாரத்தில்
சூட்சமங்கள் எல்லாமே
கிணற்றுநீர்த்தவளையாய்
மொண்டுறுஞ்சப்படுகின்றன அங்கே

கழுவித் தீர்த்திருந்தது
நட்சத்திரங்களையும் நிலாவையும்
மழை நிரம்பிய
தொட்டாங்குச்சி ஓரிரவு

ஆர்ந்த பனிமூட்டங்களின் இலயத்தில்
கலங்கித்ததும்பும்
கொந்தவெளி கீழ்வானமொன்றின்
விரிந்த வயல்களுக்கிடையில்
கருத்தமனிதர்கள் விரைந்துமறைகின்றனர்

தூரக்கிடையில்
மெலிதாய் வருடும் பிதற்றல்சுமந்த
வெண்ணிற தென்றல்
எப்போதோ பிறழ்ந்த நியாபக அலைகளை
வெள்ளியோடையின்
காலமசிகளோடு
லிகிதம் நழுவிய உதட்டோரமாய்
இளங்குயிலொன்றின்
சாகித்யத்தில்
எதையோ திரையவிழ்த்துக்கொண்டிருந்தன


அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (23-Feb-14, 3:31 am)
பார்வை : 98

மேலே