575 இன்று இறந்தது

வாடிவந்த பறவைகள்
வட்டமிட்டுத் தேடிடுமாம்
தாகத்துடன்!

ஓடிப் போனது நீரெல்லாம்
உறங்கியபடி
மணல்!

தடுமாறி வந்த நதியைத்
தாங்கிப் பிடித்தது கடல்
அலைக்கரங்களால்!

தவிக்கவிட்டு மறையும்
தலைவனாய்
அவித்துவிட்டுச் சென்றான்
கதிரவன்!

இருளெனும் போர்வை மூட
இறந்துகிடந்தது பகல்!
தலைமாட்டில் வைத்த
அகல்விளக்காய்
நிலவு!

கூடிநின்ற சுற்றமாய்
விண்மீன்கள்!
மூட வந்த பனியால்
கோடி போட்டுப் போனது
மேகம்!

ஓடிப் போன உயிர்போல்
கோடு போட்டபடி
மின்னல்!

'இன்று' இறந்தது
என்கண்களில் நீர்
மழையாக!
=== ++++ ====

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (25-Feb-14, 7:24 pm)
பார்வை : 126

மேலே