உன்னில் கரைந்தேன்

ஓர விழிப் பார்வைகளால் - என்
ஈர இதயமும் கனலில் எரிந்தபோது-
என்னை மறந்தேன் - நான்
உன்னில் கரைந்தேன்!

இதழ்களின் புன்னகையால் - என்
ஏக்க விழிப் பார்வைகளுக்கு
பதில்கள் தந்திட்ட கணங்களில்-
என்னை மறந்தேன் - நான்
உன்னில் கரைந்தேன்!

பக்கத்தில் வந்து நின்று
வெட்கத்தால் தலை குனிந்து - உன்
மஞ்சள் முகம் சிவந்தபோது-
என்னை மறந்தேன் - நான்
உன்னில் கரைந்தேன்!

மங்கியதோர் நிலவினிலே
மங்கை உன் நினைவினிலே
உனக்காய் ஏங்கிக்
காத்திருந்த நொடிகளிலே-
என்னை மறந்தேன் - நான்
உன்னில் கரைந்தேன்!

இதழோடு இதழ் பதித்து
இன்பத்தில் மூழ்கிச் சென்று
இலக்கணங்கள் உடைக்கப்பட்ட
ஒவ்வொரு பொழுதினிலும்-
என்னை மறந்தேன் - நான்
உன்னில் கரைந்தேன்!

உள்ளத்தை சூடேற்றி
உதட்டாலே உடல் முழுதும்
ஒத்தடங்கள் கொடுத்திருந்த
உஷ்ணமான குளிர் காற்றில்-
என்னை மறந்தேன் - நான்
உன்னில் கரைந்தேன்!

வேகமாய் இறுக்கி அணைத்து
வியர்வையால் உடல்கள் நனைத்து
விண்ணிலே பறந்து தவித்த
வேகமான நாழிகையில்-
என்னை மறந்தேன் - நான்
உன்னில் கரைந்தேன்!

மடியினிலே தலை வைத்து
மயக்கத்தில் நான் உளற-
பதித்த முத்தங்கள் உடன் உலர-
மீண்டும் மீண்டும் முத்தங்கள் சிந்திய
முத்தான பொழுதுகளில்-
என்னை மறந்தேன் - நான்
உன்னில் கரைந்தேன்!

உன்னில் கரைந்த என்னை
மீண்டும்
வடித்திட நினைக்காதே!

என்னை மறந்த என்னை
மீண்டும்
நினைவூட்ட நினைக்காதே!

கரைந்திருக்கும் இன்பங்களில்
கனவில் சொல்லும் கவிதைகளில்
காதலோடு நானும் வாழ்ந்து
கல்லறையை அடையும் வரை-

என்னை நான் மறந்திருப்பேன்!
உன்னில் நான் கரைந்திருப்பேன்!

எழுதியவர் : மனோ & மனோ (3-Mar-14, 6:21 pm)
Tanglish : unnil karainthen
பார்வை : 132

மேலே