முயலும் முரட்டு நாயும்

முயலை துரத்திய முரட்டு நாய் ..
அடர்ந்து விரிந்திருந்த ஒரு காடு.
அதில் பச்சைப் பசேலென வளர்ந்திருந்த புல்வெளி.
அதில் அங்கும் இங்கும் தன் இச்சைப்படி ஓடி விளையடிக் கொண்டிருந்தது ஒரு வெள்ளை நிற சின்னச்சிறு முயல்.
அப்போது அங்கு வந்த ஒரு முரட்டு நாய் அந்த முயலைப் பார்த்து பொறாமை கொண்டது.
முரட்டு நாய் உடனே அந்த முயலைப் பிடித்து தின்பதற்கு நினைத்து, அந்த முயலை விரட்டியது.
வளர்ந்திருந்த புற்களுக்கு இடையில் முயல் வளைந்தும் நெளிந்தும் பல முறைகள் திசைகளை மாற்றியும் ஓடிக்கொண்டே இருந்தது. முரட்டு நாய் அதை விடுவதாக இல்லை. இருப்பினும் முயலை விரட்டி அடித்துக்கொண்டே இருந்தது.
இறுதியில் முயல் ஒங்கிவளர்ந்திருந்த ஒரு மரத்தின் அடியில் இருந்த சிறிய பொந்திற்குள் நுழைந்து கொண்டு விட்டது.
எப்படியும் அதைப் பிடித்துத் தின்றுவிட நினைத்திருந்த முரட்டு நாய், அதன் நாக்கை வெளியில் துருத்திவைத்திருந்து அந்த மரத்தின் அடியில் கால்கள் கடுக்க காத்திருந்தது.
சற்று நேரம் கழிய, பொந்திலிருந்து தலையை எட்டிப்பார்த்தது முயல். அங்கு நாய் நின்று கொண்டிருப்பதை பார்த்தது.
உடனே, அந்த முரட்டு நாய் முயலிடம், "நண்பா .. நான் உன்னைத் தின்பதற்கு ஆசைகொண்டு தான் உன்னை விரட்டியடித்தேன். ஆனால் நீயோ உன் சிறிய கால்களின் உதவியால் பல இடங்களிலும் ஓடி என்னை களைப்படையச் செய்துவிட்டாய். உன்னை விட பெரிய கால்களும் உருவும் பல மடங்கு பலமும் என்னிடம் இருந்தும் கூட உன்னை என்னால் ஏன் பிடிக்கமுடியல்லை. இந்த கேள்விக்கு பதில் தருவாயா" என்று கெஞ்சியது.
அதற்கு, அந்த சின்னசிறு முயல், பொந்தில் இருந்தபடிக்கு, "நீ என்னைப் பிடிக்க நினைத்து விரட்டி விரட்டி ஓடிவந்தது உன் பசியை தனித்துக் கொள்வதற்கு. ஆனால் நான் ஓடியது என் உயிரைக் காத்துக்கொள்வதற்கு" என்றது.