வற்றிப் போகும் வாத்தியார் பரவை
வாத்தியார் என்கிறோமே - இவர்
வசதிகாரர் இல்லை
ஒரு வைத்திய நிபுணர்
விண்வெளிக்கான வழிகாட்டி
பல நூற்று வகிபாகி ....
தலைகாக்கும் இரத்த வழங்கி
இவர் சேமித்த அறிவை
பிறர் கணக்கில் வைப்பிலிடும்
'மாணவ' வங்கி
மானசீகத் தாங்கி.
மாற்றான் பிள்ளைக்கு
அறிவினைக் கொடுக்க
செலவழித்த காலங்களில் -இவர்
'நினைத்திருந்தால்'
மாடமாளிகைகளைக்
கட்டி மாட்சிமையோடு வாழ்ந்திருக்கலாம்
வெண்கட்டிப் பொடிகள்
எத்தனை முறை
இவர் இதயத்தை அடைத்திருக்கும்
'என்றாலும்'
தன்னுடல் பொடியாகும் வரை
கல்வியினை செவ்வனே கொடுக்க
போராடும் மனிதர் இவர்.
உயிரற்ற மெழுகுவர்த்திக்கு ஏன் இவரை
ஒப்பிட வேண்டும்.
உயிரை உருக்கி அறிவைப் பொறுக்கி
ஒளி தரும்
இம்மனிதர்க்கு யாரும் ஈடில்லை.
குரல்வளை கிழியக் கத்திக் கத்தியே
கழிந்து போகிறது இம்மாமனிதர் வாழ்வு.
மூளைகளைச் சுத்தப்படுத்தி
நாளைய பிரஜைகளை உருவாக்கும்
மூலிகை இவர்.
கருவெல்லாம் இனி குருக்களை
கூப்பியே உருவாகட்டும்
சிசுக்கள் பிறக்கையில்
'அம்மா' என்பதற்கு அடுத்தபடியாக
'ஆசான்' என அழைத்துக்
கொண்டே பிறக்கட்டும்.
தன்னிலையில் உயர்வு இல்லை
இவர் மூலம் தனக்கு மேல்
எத்தனை எத்தனை அறிவாளிகள்
அங்கும் இங்கும்
மூளைக்கு விருந்தளிக்கும் இவர்
மூலையில் முடங்கிக் கிடந்தால்
மடியும் வரை மடியிலில்லை யாரும்
மாய்ந்த பிறகே
வாயிலை நாடும் சிலர் மட்டும்.