பண்உலா போவோமே வா - நேரிசை வெண்பா 8
சோடிப் புறாஒரு சோதியாய் என்மனதில்
ஓடி விளையாடும் ஓர்காட்சி - தேடித்
தவித்திட்ட இன்பம் மனதில் தளிர்க்க
புவியெலாம் சுற்றுவோம் வா! 1
நாடி அடைந்திட நாட்டம் மிகக்கொண்டேன்
பாடிக் களித்திட்ட பாக்களும் – கோடியாம்
எண்ணிக் களித்திட எண்ணங்கள் ஏராளம்
பண்உலா போவோமே வா! 2
மாடி மறைவினில் நீயும் மறைவாயே
நாடி உனைஎங்கும் நாளெலாம் - தேடிட
சன்னலுக்குப் பின்நிற்கும் சங்கதி நானறிவேன்
என்முன்னே நேராக வா! 3
- அ வேளாங்கண்ணியின் ’காதல் கொண்டேன்!’ கவிதையிலிருந்து பிறந்த வெண்பாக்கள்