இங்கனம் உண்மைகள்

விரைவெச்சக் கழிதல்
விபத்துகளில்
விருட்சங்களாகி..
எப்பொழுதுமாய் முதல்
தலைமுறைகளையே
நிறைத்திருக்கும்
தெருவொன்றில்.....!!!

சில்லுக்கிழிசல் பதைத்து
அழுக்குக் காகித
எச்சில் ஒட்டு மருந்துகளில்
நட்பின்
இரத்த ஒழுகல்
தற்காலிகமாய் நிறுத்திய
பெருமிதப் புன்னகைகளும்....

தன்னுடலை பாகங்களாக்கி
விற்றுக் களைத்தும்....
யாருமென்றறியாது நின்றிருந்த
குழந்தையென்ற
அடையாளத்திற்கு
எச்சில்கள் துடைத்துப்
பாலூட்டுப் பகிர்தல்களும்.....

நல்வியர்வை
பசிப் பொழுதுகளில்
நாளை தருகிறேனென்னும்
வலியுணர்ந்து
மடிநிறைக்கும் முன்நரைக்
குங்குமங்களின்
நாணய நம்பிக்கைகளும்.....

வழிதவறி மயங்கிச்
சரிந்த
முகவரிதொலைத்த இன்னாரை
தாங்கிப் பிடித்து
தண்ணீர் புகட்டும்
வாய்ப்பு மறுத்து
திருடத் திணிக்கப்பட்ட
பதின்வயதுக் கைகளும்.....!!

கடந்துபோய் தெருமுனை
திரும்புகையில்....
ஒரு முதல்தள
நிலாமாடங்களின்
சீனக் கோப்பைகளில்
பால் நக்கிக்
கொண்டிருக்கிறது
இறக்குமதி நாய்....

எழுதியவர் : சரவணா (8-Apr-14, 4:26 pm)
பார்வை : 148

மேலே