வாழ்க்கை வட்டம் -கே-எஸ்-கலை
மேடுகளில் ஏறி
பள்ளங்களில் பாய்ந்து
பரிசுத்தம்
சுத்தம்
அசுத்தம்
அசிங்கம்
அசுத்தம்
சுத்தம்
பரிசுத்தம்
என்று செல்லும் பயணமிது !
கற்களில் இடித்து
வெடிப்புகளில் குதித்து
அலையடித்து
தடுமாறி
திக்குமுக்காடி
திசைமாறி
பசுமையாக்கி
வெறுமையாக்கி
முக்தி தேடி
ஓடிச் செல்லும் வாழ்க்கையிது !
குளங்களில் நிறைந்து
விளைச்சலாகி
குப்பைகளை முகர்ந்து
விஷமாகி
குட்டைகளில் தேங்கி
நோயாகி
வளைந்து நெளிந்து
விளைந்து மெலிந்து
நலிந்து போகும் யாத்திரை !
வாழ்கையின்
கடைசி பக்கம்
உப்போடு சேர்ந்து
உறவாடுகிறது !
நேரம் வரும் போது
ஆவியாகி மேலே போகும் !
ஆறுகளின்
மறுஜென்ம விஜயம்
மழையாகிப் பெய்கிறது !
அது....
மேடுகளில் ஏறி
பள்ளங்களில் பாய்ந்து
பரிசுத்தம்
சுத்தம்
அசுத்தம்
அசிங்கம்
அசுத்தம்
சுத்தம்
பரிசுத்தம்
என்று பயணிக்கும்
மானுட வாழ்வின்
சாயலை ஒத்தது !