காசு பணம்

பண்டம் பரிமாறி
பசியாறிய அண்டம்
பணப் பிண்டம் முதுகேறி
முண்டமாய் அலைகிறது
பண்பு பண்பாடு
படர்ந்த நம் கண்டம்
பாவி பணத்தின் கை கூடி
பாவம் விதைக்கிறது
பாசம் நேசமென
வாழ்ந்த நம் வம்சம்
போலி பணத்தின் வேஷத்தில்
விதைகள் தொலைக்கிறது
வீரம் மானமென
கோஷமிட்ட நம் இனம்
காசின் கரம் சேர்ந்து
காட்டிக் கொடுக்கிறது
அன்பு அஹிம்சை
போதித்த நம் மதம்
காசு பணத்திற்கு
துவேசம் விற்கிறது
குணத்தின் குகையிலே
வாழ்ந்த நம் மனிதம்
பணத்தின் புகையிலே
புனிதம் புதைக்கிறது
ஈசன் இயேசு நபி
வழி வந்த நம் சனம்
காசின் வழி தேடி
கல்லறை விரைகிறது