மலைகளின் இளவரசி கொடைக்கானல்

வழி நெடுக வானரங்கள்
வரவேற்கக் காத் திருக்கும் !
விழி கொள்ளா காட்சிகளும்
விருந்தளிக்கப் பூத் திருக்கும் !

அடர்த்தி யான விருட்சங்களும்
அடுக்கடுக்காய் உயர்ந் திருக்கும் !
கிடுகிடு பள்ளம் பார்க்க
கிறுகிறு வென தலைசுற்றும் !

வெண் முகில்கள் மையலினால்
மலைமேனி தழுவி நிற்கும் !
வெய்யோன் வர வெம்பாவும்
மெல்லமெல்ல விலகிச் செல்லும் !

பர்வதத்தில் பெரிய ஏரி
பரந்துமிக விரிந் திருக்கும் !
படகிலேறி சுற்றி வர
அழகுமனதை அள்ளிக் கொள்ளும் !

பூங்காக்கள் கிரி எங்கும்
பொலிவு காட்டி புன்னகைக்கும் !
பூத்துக்குலுங்கும் அழகு காண
கண்கள்கோடி வேண்டும் வேண்டும் !

வண்ண வண்ண மலர்களுமே
இதயத்தை வசியம் செய்யும் !
வித விதமாய் தருக்களுமே
விழிகளையும் விரிய வைக்கும் !

மஞ்சிறங்கி முகம் வருடி
முத்தமிட்டு பையச் செல்லும் !
மயக்கத்திலே உளம் உருகி
மீண்டுமதைக் கேட்கச் சொல்லும் !

சிரம் முட்டும் மேகங்களை
சிறைபிடிக்க மனம் நினைக்கும் !
கட்டி யணைத்துக் கொஞ்சிடவே
கரமிரண்டும் மேல் உயரும் !

தென்றல் வந்து தீண்டுகையில்
சிலிர்த்தவுடல் புல் லரிக்கும் !
உறைக்கும் குளிர் நடுக்கையிலே
கையிரண்டும் கட்டிக் கொள்ளும் !

இறைவன் படைப்பை வியந்துள்ளம்
இயற்கையெழிலை ரசித் திருக்கும் !
விட்டுவந்த இதய மின்னும்
மீண்டுவர சில காலமாகும் ....!!

குடும்பத் தோடு செல்கையிலே
குதூகலமும் சேர்ந்து வரும் !
குழந்தைகளுடன் கூடி யாட -மனக்
குழப்பங்களும் விலகி ஓடும் .....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-May-14, 12:39 pm)
பார்வை : 2845

மேலே