தொடரும்…
நான் வளையும்போது வளைந்து
நிமிரும்போது நிமிர்ந்து
என் ஏற்றத்தில் ஏறி
வீழ்ச்சியில் விழுந்து
என் பொய்களைப்போல் சிலிர்த்து
நிஜங்களைப் போல் தளர்ந்து
என் ஆத்மாவின் ஒளியாய்
ஒருகணம் இருண்ட இருளாய்
என் கண்ணீரில் படகாகி
புன்னகையில் பூவாகி
என முகடுகளில் அறைகூவி
பள்ளங்களில் முனகி
என்னை போலவே ரம்மியமாகி
என்னை போலவே விரக்தியுமுற்று
என் கிளைகளில் பூத்து
மடியினில் உதிர்ந்து
கணந்தோறும் கணந்தோறும்
பூத்தும் உதிர்ந்தும்
ஆம்...
அதைத் தொடர்ந்து நானல்ல
எம்மை தொடர்ந்துவரும் வாழ்க்கை...!(2004)
(கடவுளின் நிழல்கள் நூலில் வெளியானது)