உணர்ச்சிப் பூக்கள்

காடெலாம் குறிஞ்சிப் பூக்கள்
கருத்தெலாம் கவிதை மின்னல்
ஏடெலாம் புரட்சி வரிகள்
எழுத்தெலாம் செந்தேன் துளிகள்
நாடெலாம் சமத்துவக் காற்று
நதியெலாம் புதுமை வெள்ளம்
வீடெலாம் சிரித்த முகங்கள்
விழியெலாம் கனவு மலர்கள்..!

ஊரெலாம் உரிமை வேட்கை
உளமெலாம் உணர்ச்சிப் பூக்கள்
சாறெலாம் இனிப்புச் சாறு
சரமெலாம் முல்லைக் கொத்து
வேரெலாம் புதிய வளர்ச்சி
வழியெலாம் பொதுமைப் புரட்சி
சேறெலாம் செந்நெல் கூட்டம்
செந்தமிழ்ப் பயிரின் நீட்டம்..!

சிறகெலாம் நெருப்புக் குளியல்
சிரிப்பெலாம் சிந்தனைச் சிதறல்
உறவெலாம் சரிகைப் பின்னல்
உலையெலாம் பொங்கல், பொங்கல்
வரவெலாம் மகிழ்ச்சி வெள்ளம்
அழிவெலாம் வறுமை வஞ்சம்
தரையெலாம் அழகின் ராகம்
தழைப்பதோ மனித நேயம்...!(1988)

(சிகரங்களை நோக்கிய சிறகடிப்புகள்' நூலிலிருந்து)

எழுதியவர் : கவித்தாசபாபதி (18-May-14, 9:14 pm)
பார்வை : 88

மேலே