மலர்களே மலர்களே

சத்தமில்லா யுத்தத்தால் சீராய் இதழ்விரிக்கும்
முத்தமிட்ட வண்டும் மதுக்குடிக்கும் -நித்தமும்
காலையில் பூத்துக் களைகூட்டும் ,வாடிடுமே
மாலையில் வண்ண மலர்

அரும்பாய்ப் பறித்து அழகாய்த் தொடுத்து
விரும்பி வனிதையர் வைப்பர்- கருநிறக்
கொண்டையில் பூத்து குளிர்ச்சியாய்ப் புன்னகைக்கும்
செண்டுமல்லி வாசம் சிறப்பு .

முள்ளில் நடுவே மலர்ந்திடினும் ரோசாவைக்
கிள்ளுகையில் குத்திடினும் கொய்திடுவார் - அள்ளும்
அழகில் நிகரேது? அத்தர் மணத்தில்
விழச்செய்யும் மங்கை மனம் .

வாசமில்லா பூவெனினும் வண்ணத்தா லீர்த்துவிடும்
கேசத்தில் சூடாப்பூ கண்கவரும் -வாசலில்
கோலத்தில் கூட்டும் கலைவண்ணம் காண்பீரே
ஞாலத்தில் பூக்கள் வனப்பு .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-May-14, 9:44 pm)
பார்வை : 189

மேலே