எந்தன் மாளிகையில் ஆயிரம் சன்னல்கள்
எந்தன் மாளிகையில்
ஆயிரம் சன்னல்கள்....!
கொத்தனார் கட்டியதில்லை
காற்றும், மழையும், இடியும்
பெரும் மின்னலும்,
காட்டிய கருணையினால்
வீட்டின் சுவர்களில் ஏற்பட்ட
ஓட்டைகள்,
பேய் காற்றை உள்ளுக்குள்
வாங்கி, ஆட்களை
அசர செய்யும் அட்டகாசங்கள்
விசிறிக்கு வேலை இல்லை
எந்தன் இல்லத்திலே, காற்றுக்கு
பஞ்சமில்லை,
வீசும் காற்று வந்து சேரும்
தன்னாலே, கொஞ்சமும்
தயங்காமலே
உடுத்திட இரண்டு உடுப்புண்டு
அதனினில் நட்சத்திர ஓட்டைகளின், வடிவமைப்பும் உண்டு
தைக்கவும் அதிலே இடமில்லை,
அதை துவைக்கவும் எனக்கு
வாய்ப்பில்லை
உண்ண இரண்டொரு வட்டில்
உண்டு, உணவாய் அதிலே சில நேரம்
சோறு விழுவதுண்டு
காணாத அதிசயத்தை கண்டது
போல உண்ணாமல் அதை
பார்த்து பல நேரம்
அமருவதுண்டு
நான் பெற்ற செல்வங்கள்
வயிறு நிறையவில்லை என்று
வந்து நின்றால், அந்த
சோறு அவர்கள் வயிற்றுக்கு
போவதுண்டு
எட்டி, எட்டி நான் பறித்தாலும்
எனக்கு எட்டாத தொலைவில்
கொய்யாக்கனிகள் மரத்தில்
காய்த்து தொங்குவதுண்டு
கல் எறிந்து நான் முயன்றாலும்
சில கனிகள் அடுத்த வீட்டு
தோட்டத்தில் போய் விழுவதுண்டு
என்ன ராசி எனக்கென்றே நான்
விழுந்து, விழுந்து சிரிப்பதுண்டு
அந்த சிரிக்கும் தன்மை தான்
என்னை வாழ வைக்கிறது
என்று உணர்வதுண்டு....!