தோள்களில் தொத்தும் கிளிகள்
என் தாயின்மடியைப் போலவே
பாதுகாப்பாகவே இருக்கிறது
இந்த உலகம்
ஒரு பருவம்
என் மலர்களைப் பறித்தெறிந்துவிட்டாலும்
என் சருகுகளை மிதித்துக்கொண்டு
பூக்கும் இன்னொரு பருவம்
நான் நழுவவிட்ட பொற்கணங்கள்
ஒரு பொழுதில்
என் தோள்களில் தொத்தும்
கிளிகளாய்
எத்தனையோ
திக்கற்ற முனைகளில்
ஒரு திருப்புமுனை
என் திசைகளைத் திறந்துவிடும்
ரசித்தாலும்
ரணப்படுத்தினாலும்
தாயுலகம் தாங்கி சுமக்க
தவழும் குழந்தை நான்
பாதுகாப்பாகவே இருக்கிறது
இந்த உலகம்
என் தாயின்மடியைப் போலவே…..! (1997)
( எமது "கடவுளின் நிழல்கள்" நூலிலிருந்து)