அடி நான் பெத்த மகளே நீ எப்ப வருவ

(ஓடிப் போன பெண்ணை நினைத்து ஒரு தாயின் கதறல்....)

நீ என்னில் உருவெடுத்த போது
என் உள்ளமெல்லாம் எல்லை
இல்லா மகிழ்ச்சி....

நொடிக்கு ஒரு முறை நான்
கஷ்ட பட்டாலும் என் தங்கமே
நீ என்னுடன் இருப்பதை
நினைத்து நான் சந்தோஷப்பட்டேனடி...

என் செல்லமே உன்னால் தானடி
நான் தாய்மை என்னும் பட்டதைப் பெற்றேன்...

நான் பத்து மாதம் சுமந்து
பெற்றெடுத்த பத்தர மாத்து
தங்கம் நீ தானடி...

சுமை கூட சுகம் தானடி
உன்னை சுமந்த தாய் எனக்கு....

என் செல்லமே நான் புரண்டு
படுத்தால் நீ கலைந்து விடுவாயோ
என்று கண் விழித்து உன்னை காத்தேனடி...

பிறந்தது பெண்ணா என்று
பெருமை கொள்ளாத உறவுக்கு
மத்தியில் உன்னை பெற்றெடுத்த
சந்தோஷத்தில் நான்...

உன் வளர்ச்சி கண்டு
என் சோகம் மறந்தேனடி...

ஒரு நொடி நீ அழுதால்
அக்கணமே நான் துடித்து போவேனடி...

உன்னை பள்ளிக்கு அனுப்பிவிட்டு
நான் கழனிக்கு சென்றேனடி...

நாலெழுத்து நீ படிக்க
காடு மேடு நான் நடந்தேன்...

நீ படிக்கும் அழகை பார்த்து இந்த
படிக்காத பாவி நானே ரசித்தேனடி...

நீயும் பள்ளி பருவத்தை முடித்து வர
ஊரறிய பெருமை கொண்டேனடி...

நீ ஆளாகிய பின் நான்
அரை கிழவி தான் என்று
நினைத்து உன் அழகில்
என் அழகை பார்த்தேனடி...

என்னை போல நீயும் இருக்க கூடாது
என்று நினைத்து தான் உன்னை கல்லூரியில் சேர்த்தனடி...

நீயும் படித்து பட்டதை
வாங்கி வருவாய் என்று
எண்ணி இருக்க....ஆனால்

நீயோ கல்லூரி படிப்போடு
காதலையும் சேர்த்து படிப்பாய்
என்று இந்த பாவிக்கு தெரியாமல் போய்விட்டதடி...

உச்சி வெயிலில் காலில்
செருப்பில்லாமல் நான்
அதை மறந்து காதல்
படிப்பில் நீ...

உன்னை செங்கோட்டையின் ராணியாக
வைத்து கற்பனையில் நான் மிதக்க
கல்லூரிக்கு சென்ற கன்னி
இன்னும் வீடு திரும்ப வில்லை...

நொடிகள் என்னை கடந்து
போக போக என் மனமோ
ரணமாய் துடிக்கிறது மகளே
உன்னை காணாத ஏக்கத்தில்....

அவள் வரவை எண்ணி
வாசற்படி வாயிலில் ஒரு அனாதையாய் நான்...

அடி நான் பெத்த மகளே என்ன விட்டு
போக உனக்கு எப்படி மனம் வந்ததடி...

இந்த படிக்காத பாவிக்கு
உறவுக்கு மத்தியில் நீ கொடுத்த
சென்ற பட்டம் ஓடு காளியை
பெற்றெடுத்த தாய் என்று...

கல்லூரி சென்று வாங்க வில்லையடி
இந்த பட்டத்தை நீ என்னை கடந்து
சென்ற போது கொடுக்கப்பட்டது
பலரின் வாய்மையால் வாழ்த்தும் பெற்றேனடி...

கஞ்சி தண்ணி இல்லாம
கண்ணீரோடு நான் செத்துகொண்டிருக்கேன்..

அடி நான் பெத்த மகளே
நீ எப்ப வருவ எனக்கு உயிர்
தண்ணி கொடுக்க...

உன்ன பெத்த வயிறு பத்தி
எரியுது நீ எப்ப வருவ என் தங்கரதமே..

உன்ன பார்க்காம என் உசுரு
போகாது அப்படியே உயிர்
பிரிந்தாலும் கொல்லி போடாவாவது
வந்துருடி என் வெள்ளி நிலவே!!!!!!

(செல்ல மகள்களே இந்த தப்ப செய்து பெற்ற தாயை கொல்லாதீங்க...)

எழுதியவர் : சங்கீதா இந்திரா (13-Aug-14, 9:02 pm)
பார்வை : 582

மேலே