அழகான வாழ்க்கை ஆனந்தமாய்

காலையிலே சூரியனின் கதிரும் - புல்லில்
.........கண்சிமிட்டிப் பனித்துளிகள் உதிரும் - அந்த
வேளையிலே குயில்பாட குருவிகளும் சேர்ந்தாட
.........மரஇலைகள் மேளமென அதிரும் - இன்ப
.........மயக்கத்தில் நினைவுகளும் சிதறும்

அத்தானென் றழைக்கின்ற பூவை - வண்டும்
.........ஆசையுடன் பார்க்குமொரு பார்வை - மேல்கீழ்
முத்தமிட்டு விட்டதனால் தேன்குடிக்கத் தொட்டதனால்
.........பூப்படைந்து விட்டாளாம் பாவை - இயற்கைப்
.........புணர்ச்சிக்கு வேறென்ன தேவை !

ராத்திரியில் விண்மீனைக் கண்டு - உடனே
.........ரகசியமாய் நான்கேட்டேன் ஒன்று - என்னைக்
காத்திருக்கச் சொல்லிவிட்டு காதலனாய் எனைப்பார்த்து
.........பலகோடி கண்திறந்து நின்று - தினமும்
.........பார்க்கிறது காதலுடன் இன்று !

படைதிரட்டி வருகின்ற மேகம் - வானம்
.........பிரசவித்த மழைப்பெண்ணின் தேகம் - பூமி
உடைமாற்றிப் பச்சைநிறப் பட்டுடுத்தி நிற்பதனால்
.........பாய்விரிக்கச் சொல்கிறது மோகம் - அழகைப்
.........பார்த்தாலே ஆவிபறி போகும்

ஓடைகளில் மீன்கூட்டம் துள்ள - அங்கு
.........ஓடிவரும் மான்கூட்டம் மெல்ல - அந்த
கோடைமணல் சூட்டிற்கு கூட்டத்துடன் பறவைகளும்
.........குளித்துவிட்டு மெதுவாகச் செல்ல - அதை
.........கவிதையிலே என்னவென்று சொல்ல

மழையென்னும் மழலைகளாய்ப் பிறந்து - பச்சை
.........மலைமகளின் மார்போடு வழிந்து - யாரோ
அழைத்ததுபோல் தொலைதூரம் நதியோடு ஓடிவந்து
.........கடலுக்குள் ஓய்வெடுக்கும் விழுந்து - மீண்டும்
.........கரையோரம் அலையடிக்கும் எழுந்து

சோலைகளில் பூச்சிமிழ்கள் தாண்டும் - தென்றல்
.........சொர்க்கத்து சுகம்தந்து தீண்டும் - வானம்
மாலையிலே குங்குமத்தில் குளித்துவந்த மணப்பெண்ணாய்
.........மனதிற்குள் ஆசைகளைத் தூண்டும் - அந்த
.........மயக்கத்தில் நானுறங்க வேண்டும்

எழுதியவர் : ஜின்னா (20-Aug-14, 2:29 pm)
பார்வை : 452

மேலே