அழகை சூடும் ஆபரணம்

அத்தனை ஆபரணங்களும்
அழகாய் ஜொலிக்கிறது
உன்னை அணிந்துகொண்ட சந்தோசத்தில்
தினந்தினம்
திருமணம் செய்துகொள்ள மாட்டாயா
மடியேந்தி கேட்கின்றன
ஆடைப்பூக்கள்.....
உன் விழியொளி பட்டதில்
பட்டத்து மகுடமாய் பளபளக்கிறது
பட்டாடை பனிப்பூ கற்கள்
உதட்டுச்சாயத்துக்கும்
உள்ளங்கை மருதாணிக்கும்
ஒருசேர போட்டி
உன் வெட்கத்தின் சிவப்பை
யார் மிஞ்சுவது என..!!
நீ அமர்ந்துவிட்டு எழுந்துபோகிறாய்
உன்னை எட்டிப்பிடிக்க
எழுந்து தோற்று விடுகிறது
பூவை தாங்கிய புதுப்பஞ்சணை
உன்கண்களை
விட்டு விலகக்கூடாதென
விடாப்பிடியாய் ஒட்டிக்கொண்டது
கண் மை
கருமையாய்...!!
உன்னை வளைத்துக்கொண்ட
மகிழ்ச்சியில்
சங்கீத ஸ்வரத்துடனே
வலையவருகின்றன வளையல்கள்
ஓராயிரம் முறை தவம் செய்து
ஒரே வரம்பெற்றுவிட்டன உன் நகங்கள்
நுகங்கள் ஏதுமில்லாமல்
நுனிவிரல்களுடனே ஒட்டிக்கொள்ள
உன் நெற்றிப்பொட்டில்
ஒளிந்துக்கொண்டது
நிலவும் கதிரும் ஒன்றாக ...
எல்லாவற்றுக்கும் மேலாக
ஒரு உயிரை அணிந்துகொள்கிறாய்
உன்னத காதலால்
கவிதாயினி நிலாபாரதி