பேனா இல்லாத பாக்கெட் கவிதை

*
அலுவலகம் கதவுகளைத் திறந்து
விழிப்போடு வரவேற்கின்றன
வாடிக்கையாளர்களை அன்போடு,
கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருக்கும்
அலுவலர்கள் தலைத் தொங்க
இமைகள் கணினியின்மீது பதியப்
பணியாற்றுகிறார்கள் எத்தனையோ
மனஉளைச்சலோடு,
*
உள்ளே வருவதும்
வெளியே போவதுமான
வாடிக்கையாளர்கள்
கவுண்டர் கவுண்டராய்
கால்கள் கடுக்க நின்று
அவசரஅவசரமாய் தன்
பணிகளை முடிக்கடிவெனப்
பரபரப்பான மனஉணர்வோடு,
*
வேலைமுடிந்தவர்கள்
புன்சிரிப்போடும்
வேலைமுடியாதவர்கள்
கடுகடுப்போடும்
வெளியேறுகின்றார்கள்
அலுவலகம் விட்டு,
*
விண்ணப்பங்களை எழுதுவதும்
தவறுகளைத் திருத்துவதுமாகப் பலர்
எழுதுபலகையின் மீது வைத்து
எழுதிக் கொண்டிருக்கிறார்கள்
தவறு நேராமல் கவனம் வைத்து,
*
அவசரஅவசரமாய்
அருகில் வந்து நின்ற ஒருவர்
குனிந்த தலைநிமிராமல்
எழுதிக் கொண்டிருந்தவரிடம்
“ சார், கொஞ்சம் பேனா
கொடுக்க முடியுமா? “ என்றார்.
நிமிர்ந்துப் பார்த்தவர்
கண்களின் வழியே
பதில் சொன்னார்.
பேனா, கேட்டவர் மீண்டும்
அடுத்த நபரை நோக்கிப் போய்க்
கேட்டு நின்றார்.
அவர் கொடுத்தவுடன்
எழுதத் தொடங்கினார்.
நன்றாக எழுதுகிறது போலும்
அந்த இரவல் பேனா.
பேனா இல்லாத பாக்கெட்டே
பாக்கெட் அல்ல
பேனா இருக்கும் பாக்கெட்டின்
தனிப் பெருங் கருணையே
தனிப்பேரழகு….!!
*

எழுதியவர் : ந.க.துறைவன் (1-Sep-14, 11:49 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 97

மேலே