எத்தனை இழந்து விட்டோம்
பச்சை குதிரையும்
பாண்டி ஆட்டமும்
போனது எங்கே
தெரியவில்லை
பல்லாங் குழியும்
சோழி கூட்டலும்
சொல்லாமல் போனது
சரி யில்லை
கண்ணா மூச்சியும்
கபடி ஆட்டமும்
கடந்த காலமாய்
போனது ஏனோ?
வானத்தை மறைக்கும்
வண்ணமிகு பட்டங்கள்
வழி தவறியதே
விழி நனைகிறதே
சிகரத்தை அடைந்த
சிலம்பும் களரியும்
சேர்த்திட வழியின்றி
சிதறிக் கிடக்கிறதே
ஒவ்வொரு செயலிலும்
ஆயிரம் அர்த்தங்கள்
விளையாட்டின்
ஒவ்வொரு அசைவிலும்
அத்தனை பயிற்சிகள்
இது போல் பலதை
இழக்க விட்டோம் - இன்று
நம்மை நாமே
இழந்து விட்டோம்
மூடிய அறையில்
கணினி வழியே
அசைவின்றி ஆடும்
பைத்தியம் ஆனோம்
நட்பின் வட்டம்
குறைத்து விட்டோம்
தன்னந் தனியே
அடங்கி விட்டோம்
தரணி போற்றிய
தமிழனின் பெருமைகள்
தடம் தெரியாமல்
தொலைத்து விட்டோம்
அடைந்த சுகங்கள்
இனிமேல் வருமா
இழந்த வாழ்வை
மீண்டும் தருமா?