கதவு இல்லாத கருவூலம்

அன்பார்ந்த கவிஞர் புது யுகன் அவர்களே,

தங்களுடைய "கதவு இல்லாத கருவூலம்" என்ற பொக்கிஷத்தைத் தேடிச் சென்று சென்னையில் வாங்கி வந்து, பத்திரமான சூழலில் படித்து இன்புறும் வாய்ப்பு இன்றிரவு தான் கிட்டியது. அதன் பலன் மிக இனிமையாக இருந்தது.

பெரும் தமிழ் அறிஞர்களின் ஆசியுடன் புத்தகம் அமர்க்களமாகத் தொடங்கியது. ஆதவனாம் பரிதி மால் கலைஞர் நினைவு கூறலில் தொடங்கிய கருவூலம், ஆரம்பக் கவிதையாக "சூரிய புத்திரனை" வைத்தது மிகவும் பொருத்தமான ஒன்று.

புதுக் கவிதைகளில் நாட்டமோ, அதைப் பாராட்டும் அறிவோ அற்ற என் போன்றவர்களையே இழுக்கும் வசீகரம் தங்களின் புதுக் கவிதைக்கு உள்ளது.

"தாயே தமிழே தனையனின் வாழி" - மரபு வழியில் வாழ்த்து ரசிக்கும்படி இருந்தது.

"வந்தே மாதரம்" - ஆதங்கத்தை வெளிப்படுத்தி, தலைப்புக்குப் பொருத்தமாக மனதிற்கும் நிம்மதி அளிக்கும் பாடலாக இருந்தது.

"ஒரு குழந்தையின் தாலாட்டு" - கிராமத்துப் பாணியிலும் நெஞ்சை நெகிழும் பாடலைத் தங்களால் எழுத முடியும் என்று பறை சாற்றி புத்தகத்தின் சிகரம் எனப் பட்டது. பிறகு வரும் கவிதைகளை யார் அறிவார்?

"இதய ஊர்வலம்" - கண்ணில் நீரை வரவழைத்தது. விடைபெறும் இறந்த மனைவியின்ஆதங்கப் பாடலாக அமைத்தது புதுமை. எதார்த்த கருத்துக்களை எளிமையாக வைத்தது திறமை. ஒவ்வொரு கணவன் மனைவியையும் தொடும் விதமாக எழுதியது பெருமை. மரபுக் கவிதைகளை விட்டு விட்டு, இந்தப் புதுக் கவிதையைப் புத்தகத்தின் சிறந்த கவிதையாக என்னைத் தேர்ந்தெடுக்க வைத்து விட்டீர்!

"காதலில் மட்டும்" - இனிமையாக முடிக்க, ஒரு மரபுக் கவிதையாக இனிய காதலை வெளிப்படுத்திய இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.

"கதவு இல்லாத கருவூலம்" என்ற பெயர் மிகப் பொருத்தம். நமக்குப் பிடித்த நகைகளை எடுத்துக் கொள்ள எண்ணி உள்ளே சென்று, எதிர்பாரா விதமாக அதை விட சிறப்பான நகைகளை எடுத்துக்கொண்டு மூளையே வேறு விதமாக சிந்திக்க வைத்த ஒரு சித்து வேலை இந்தக் கருவூலம்.

அற்புதம்
பணி தொடரட்டும் என்று சுய நலத்துடன் வாழ்த்துகிறேன்!

அன்புடன்
பாலநேத்திரம்
ட்ராய், மிசிகன் USA

***
டாக்டர் பாலநேத்திரம், தமிழ் ஆர்வலர், கவிஞர், அறிஞர். அமெரிக்க மண்ணில் மிசிகனில் 'தமிழ் அமுதம்' வானொலி நடத்தி திரைஇசை அக்கறைமிசை பல காலம் உலாவச் செய்த பெருமைக்குரியவர். பல பிரபலங்களை கண்டவர்; நேர்கண்டவர். அன்றாடம் நின்றாடும் நல்ல திறன்களை இரசிக்கிறவர்.

'கதவு இல்லாத கருவூலம்' கவிதைத் தொகுப்பிற்கான அவரது விமர்சனம் மேலே.

எழுதியவர் : கவிஞர் புதுயுகன் (21-Sep-14, 3:28 pm)
சேர்த்தது : pudhuyugan
பார்வை : 428

மேலே